பள்ளிப்பாளையம் மேம்பாலத்தின் தரம் குறித்த சர்ச்சைக்கு அரசு மறுப்பு

Published : May 30, 2025, 03:27 AM IST
tn govt

சுருக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் தரமற்று கட்டப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தமிழக அரசு மறுத்துள்ளது. சர்வதேச தரத்துடன் கட்டப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை விளக்கமளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக புதிதாகக் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் தரமற்று கட்டப்பட்டுள்ளதாகவும், பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சுற்றுச்சுவரின் கற்கள் பெயர்ந்து விழுவதாகவும் சமூக வலைத்தளங்களிலும், சில ஊடகங்களிலும் பரவி வந்த குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த மேம்பாலம் சர்வதேச தரத்துடன் கட்டப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை விளக்கமளித்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்த இந்த மேம்பாலம் குறித்து அவதூறான செய்திகள் பரப்பப்படுவதாக அரசு சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக அரசின் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

"மல்லியக்கரை - ராசிபுரம் - திருச்செங்கோடு - ஈரோடு ஆகிய இருவழிச்சாலையை நான்குவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் மற்றும் இருவழித்தட உயர்மட்ட பாலம், சங்ககிரிக்கு அணுகுப்பாலம் உள்ளிட்ட பணிகள் ரூ.373.15 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டன. நில எடுப்புப் பணிகளுக்காக ரூ.51.23 கோடி ஒதுக்கப்பட்டது. ஆக மொத்தம் ரூ.424.38 கோடி திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இத்திட்டப் பணிகள் நிறைவு செய்யப்பட்டன.

இந்தப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தார். இந்நிலையில், இந்த மேம்பாலத்தின் தரம் குறித்து அவதூறு ஏற்படுத்தும் வகையில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த பாலம் 3.403 கிலோ மீட்டர் நீளமுள்ள இருவழித்தட உயர்மட்ட மேம்பாலம் ஆகும். இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணியானது சர்வதேச தரத்திலான மேற்பார்வைக் குழுவினரால் தரக்கட்டுப்பாட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மிகச் சிறந்த முறையில் கட்டப்பட்டுள்ளது.

மேம்பாலத்தின் ஒவ்வொரு கட்டுமான நிலையிலும், இந்திய அரசு நிர்ணயித்துள்ள அனைத்து விதமான தரக்கட்டுப்பாட்டு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்ட பின்னரே அடுத்தகட்ட பணிகள் தொடரப்பட்டு, பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்ததாரர் 7 ஆண்டுகளுக்கு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, மேம்பாலத்தின் தரம் குறித்து வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை. அரசின் நல்ல திட்டங்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் இவை பரப்பப்படுகின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்."

இவ்வாறு நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!