தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ். அழகிரி இன்று அவரது வீட்டிலிருந்து நடைபயிற்சி மேற்கொண்டபோது, தவறி கீழே விழுந்து கால் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு இருப்பதாக காங்கிரஸ் அலுவலக வட்டாரம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ். அழகிரி இன்று (28.07.2023) வெள்ளிக்கிழமை காலை சிதம்பரம் அருகில் கீரப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் தவறி கீழே விழுந்து நெற்றி மற்றும் கால்முட்டி ஆகிய பகுதிகளில் காயமடைந்துள்ளது.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பினார் என்றும், அவர் தற்போது பூரண ஓய்வில் உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனால் இன்று மாலை காட்டுமன்னார் கோயிலில் நடைபெறுகிற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு தொடக்கவிழாவில், அவர் பங்கேற்க இயலவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்று காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.