புள்ளி விவரத்துடன் பேசிய ஸ்டாலின்.. உங்களுக்கு துணை நிற்போம்..பிரதமர் கூட்டத்தில் அதிரடி பேச்சு..

By Thanalakshmi VFirst Published Jan 13, 2022, 7:48 PM IST
Highlights

கொரோனா தடுப்பு பணியில் மத்திய அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழ்நாடு துணை நிற்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடியுடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
 

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா தொற்று 2 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,47,417 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை சுகாதாரத்துறை உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி தடுப்பூசி திட்டத்தை விரிவுப்படுத்த அறிவுறுத்தினார். இதனையடுத்து இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி அலோசனை கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா , நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய பிரதமர், முந்தைய தொற்றுடன் ஒப்பிடும் போது ஒமைக்ரான் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. எனவே நாம் பதற்றமடையாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளில் தனிமைபடுத்தி சிகிச்சை அளிக்கலாம் என்று மாநில முதலமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுபடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முழு முயற்சியுடன் எடுக்க வேண்டும் எனவும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட தடுப்பூசி தான் சிறந்த ஆயுதம் என்று வலியுறுத்தினார். இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் மத்திய அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழ்நாடு துணை நிற்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடியுடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா அலையை நிர்வகிப்பதில் ஒன்றிய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தமிழ்நாடு துணை நிற்கும் என்று மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதியளித்தார். pic.twitter.com/Flsn4o0MgX

— CMOTamilNadu (@CMOTamilnadu)

மேலும் பேசிய அவர், கொரோனா தொற்று நோயின் ஒமைக்ரான் அலையை நிர்வகிக்க தமிழகம் முழுமையாகத் தயார் நிலையில் உள்ளது. எனது அரசு பொறுப்பேற்ற பிறகு, தடுப்பூசி செலுத்துவது அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று வரை, தகுதியுள்ளவர்களில் 64% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், 15 முதல் 18 வயது வரையிலான இளைஞர்களில் 74 சதவிகிதத்தினருக்கு தடுப்பூசி போட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கும் தற்போது நல்ல வரவேற்பு உள்ளது என்றார்.

கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்திட, மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தேவையான அனைத்து நகரங்களிலும் கொரோனா பராமரிப்பு மையங்களும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தேசிய அளவில் வரையறுக்கப்பட்ட சோதனை விதிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மட்டுமே பயன்படுத்துப்படுகிறது. ஆர்.டி.பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கை, ஆக்சிஜன் உற்பத்தி திறன், ஆக்சிஜன் சேமிப்பு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளும் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. .

கொரோனா பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளைக் கண்டிப்பாக அமல்படுத்துமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் நான் அறிவுறுத்தியுள்ளேன். நிலைமையைச் சமாளிக்க அனைத்து அரசு இயந்திரமும் முழுமையாக தயார் நிலையில் உள்ளது. இந்த கொரோனா அலையை நிர்வகிப்பதில் மத்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தமிழ்நாடு துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறேன் என்று ஆலோசனை முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

click me!