MK Stalin: இலவசப் பேருந்து முதல் புதுமைப்பெண் திட்டம் வரை! பெண்கள் நலம் காக்கும் முதல்வர் மு. க. ஸ்டாலின்!

By SG Balan  |  First Published Feb 28, 2023, 9:14 PM IST

முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெண்கள் முன்னேற்றத்துக்காகக் கொண்டுவந்த திட்டங்கள், எடுத்த நடவடிக்கைகள் பலவற்றையும் பற்றி ஒரு பார்வை.


2021ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றது முதல் பெண்கள் முன்னேற்றத்துக்கான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன. அவற்றைப் பற்றிய செய்தித்தொகுப்பு இது.

முதல் கையெழுத்து

Latest Videos

மு. க. ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றவுடன் ஐந்து அரசாணைகளில் கையொத்திட்டார். அவற்றில் ஒன்றுதான் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் செய்வதற்கான ஆணை. அதுமட்டுமின்றி மக்களின் குறைகளைப் பற்றி அறிந்து அவற்றை 100 நாட்களுக்குள் களைவதற்கான ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை அறிவித்து, அத்திட்டத்தின் பொறுப்பில் பெண் ஐஏஎஸ் அதிகாரியான ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்களை நியமனம் செய்ததும் முதல் கையெழுத்துகளில் ஒன்று.

கட்டணமில்லா பேருந்துப் பயணம்

அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்ற அறிவிப்பு திமுகவின் தேர்தல் அறிக்கையில் பலரையும் கவர்ந்த திட்டம் ஆகும். இத்திட்டத்தை ஆட்சிக்கு வந்த மறுநாளிலேயே செயல்படுத்தியவர் மு. க. ஸ்டாலின். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இயக்கும் சாதாரண கட்டணம் கொண்ட பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டது. சமூக நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

2022ஆம் ஆண்டு மே மாதம் வெளியான அறிக்கையின்படி, பெண்கள் மாதம் தோறும் 756 ரூபாயில் இருந்து 1,012 ரூபாய் வரையிலும் இந்த சலுகையால் சேமிக்கிறார்கள். அதுவரை 115 கோடி பெண்கள் இத்திட்டம் மூலம் பயன்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிப்பவர்களில் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 61 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்பதையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஓர் உரையில் சுட்டிக்காட்டி இருக்கிறார். நாள் ஒன்றுக்கு சுமார் 26 லட்சம் பெண்கள் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கிறார்கள்.

மாணவிகளுக்கு கல்வி நிதியுதவி

2022-23ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகள், உயர் கல்வியில் சேர்வது குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்’ அறிவிக்கப்பட்டது. ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்’ என்ற பெயரில் நடைமுறையில் இருந்த தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட திருமண உதவிகளை வழங்கும் திட்டமானது பெண்கள் உயர்கல்விக்கான திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டது.

புதுமைப்பெண் திட்டம் என்றும் அழைக்கப்படும் இத்திட்டம் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்தின் கீழ் மாணவிகள் உயர்கல்வியை முடிக்கும் வரை ஒவ்வொரு மாதமும் ரூ.1000 நிதியுதவி கொடுக்கப்படுகிறது. இந்தத் தொகை மாணவிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிப் படிப்பில் சேர்ந்த 1.16 லட்சம் மாணவிகள் பயன் அடைந்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: இலங்கை தமிழர்கள் அநாதைகள் அல்ல... சொல்லி அடித்த முதல்வர் மு. க. ஸ்டாலின் - திமுக அரசின் இமாலய சாதனைகள்!

சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கூட்டுறவுச் சங்கங்கள் வழங்கிய கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டிருந்தது.  ஸ்டாலின் அரசின் முதல் பட்ஜெட் அறிக்கையிலும் இதுபற்றிய தெரிவிக்கப்பட்டது. அதன்படி 2021ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடனில் மார்ச் 31 வரை நிலுவையில் இருந்த 2,755.89 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படுவதாக அரசாணை வெளியானது.

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், மத்தியக் கூட்டுறவு வங்கிகள், நபார்டு உள்ளிட்டவை மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் தொடர்பான அனைத்து வகையான நிலுவைகளையும் உள்ளடக்கிய தொகையாக ரூ.2,755.89 கோடியை ஸ்டாலின் அரசு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பெண்களும் அர்ச்சகராகலாம்!

1970ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கலைஞர் மு. கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்துக்கான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். ஆனால் அந்தத் தீர்மானம் பல்வேறு காரணங்களால் சட்டமாக இயற்றப்படாமல் இருந்தது. 51 வருடங்களுக்குப் பின் முதல்வர் மு. க. ஸ்டாலின் அதனை சட்டமாக இயற்றிக் காட்டியுள்ளார்.

பெண்களும் கோயில்களில் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டவுடன் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுஹாஞ்சனா என்ற பெண் சேலையூர் அருகை உள்ள மாடம்பாக்கத்தில் உள்ள அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோவிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்.

குடும்பத் தலைவிகள் பெயரில் வீடு

கடந்த ஆண்டு மார்ச் மாதம் மகளிர் தின நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தந்தை பெரியார் நினைவு – சமத்துவபுரம் திட்டம் முன்னாள் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி ஆட்சியில் கொண்டுவரப்பட்டதை நினைவுகூர்ந்தார். அந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகள் குடும்பத் தலைவிகளின் பெயரில் பதிவு செய்து வழங்கப்பட்டன என்றும் சுட்டிக்காட்டினார். அதனைப் பின்பற்றி தற்போது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அளிக்கப்படும் வீடுகளும் இனி குடும்பத் தலைவிகள் பெயரிலேயே பதிவு செய்யப்படும் என்று அறிவித்தார் முதல்வர் மு. க. ஸ்டாலின்.

12 மாத பேறுகால விடுப்பு 

பெண்களின் பேறுகால விடுமுறையை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தும் அரசாணையும் முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆட்சியில் வெளியான முக்கிய அறிவிப்பாகும். அரசாணை வெளியாவதற்கு முன்பே பேறுகால விடுப்பில் சென்றவர்களும், 12 மாத பேறுகால விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்றும் பேறுகால விடுப்பு முடிந்த பின்பும், பணிக்கு வரமுடியாமல் விடுப்பு எடுத்திருந்தால், அதுவும் பேறுகால விடுப்பாகவே கருதப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மகப்பேறு தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையின்போது நீதிபதி பார்த்திபன் தமிழக அரசின் இந்த அரசாணையை பாராட்டிப் பேசினார். தாய்மையின் முக்கியத்துவத்துவத்தைப் புரிந்துகொண்டு, பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் பேறுகால விடுப்பை 12 மாதங்களாக உயர்த்திய தமிழக அரசை உயர் நீதிமன்றம் பாராட்டுகிறது என்று நீதிபதி பார்த்திபன் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் உதவி

முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பெண்கள் சொந்தக் காலில் நிற்க உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. பெண்கள் தாமாக தொழில் தொடங்கி முன்னேறும் வகையில் 31,321 மகளிர் சுய உதவிக் குழுக்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் உள்ள சுமார் 4 லட்சம் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்காக ரூ.20,479 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. வேலை தேடும் பெண்களுக்கு வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் 17,192 பெண்களுக்கு தமிழக அரசு சார்பில் திறன் பயிற்சி வழங்கப்படுகிறது.

சாலை பாதுகாப்பில் பெண் காவலர்களுக்கு விலக்கு

2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியதன் பேரில், சாலைப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதில் பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. சாலைகளில் பாதுகாப்பு பணிக்குப் பதிலாக வேறு பணிகளை அவர்களுக்கு வழங்கலாம் என்றும் முதல்வர் மு. க. ஸ்டாலின் காவல்துறைக்கு அறிவுறுத்தி இருந்தார்.

இதன் மூலம் ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் செல்லும் சாலைகளில் பாதுகாப்புக்காக பெண் காவலர்கள் நிறுத்தப்படுவது தவிரிக்கப்படுகிறது. சாலையில் பணியில் உள்ள பெண் காவலர்கள் இயற்கை உபாதைகளை கழிக்கவும் வசதிகள் இல்லாத சூழல் இருக்கும் என்பதால் அவர்களுடைய சிரமங்களை உணர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தது. இத்திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இச்சூழலில் அந்தத் திட்டம் தொடர்பாக வருகிற தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பிறந்தநாள் முதல் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வரின் அக்கறை

அண்மையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அரசு அலுவலகங்களுக்கு வரும் பெண்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை பொறுப்பாக கவனித்து பதில் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது சொந்த சட்டப்பேரவைத் தொகுதியான கொளத்தூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியின் பேசிய முதல்வர் ஸ்டாலின், பட்டப்படிப்பை முடித்த பெற்ற பெண்கள் தகுதிக்கு உரிய பணிகளைத் தேர்வு செய்யுங்கள். ஒரு தந்தையாக, பெண்கள் பொருளாதார ரீதியாக சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

தனது முதல் ஆட்சிக்காலத்திலேயே முதல்வர் மு. க. ஸ்டாலின் பல்வேறு முன்னோடியான நலத்திட்டங்களைக் கொண்டுவந்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். அதிலும் குறிப்பாக பெண்கள் நலனுக்கான திட்டங்களில் அவர் கொண்டிருக்கும் தொடர்ச்சியான அக்கறையை இதுவரை செயல்படுத்தப்பட்டு வருகின்ற இத்திட்டங்கள் மூலம் கண்கூடாக உணரமுடியும் என்பதில் ஐயமில்லை.

இதையும் படிங்க: தந்தையை மிஞ்சிய மகன்! மாற்றுத் திறனாளிகள் & திருநங்கைக்களுக்கு நலத்திட்டங்களை வாரி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

click me!