
மதுரை திருப்பரங்குன்றம் விவகாரம் தமிழகம் முழுவதும் கொழுது விட்டு எரிகிறது. திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டதை திமுக அரசு நேற்று செயல்படுத்தவில்லை. தனது உத்தரவை செயல்படுத்தாத மதுரை காவல் ஆணையர் லோகநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியரை கண்டித்த நீதிபதி இன்று மாலை 7 மணிக்கு தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.
ஆனால் இன்றும் சட்ட ஒழுங்கு மற்றும் தமிழக அரசின் மேல்முறையீட்டை காரணம் காட்டி மனுதாரர் மற்றும் பாஜகவினர், இந்துமுன்னணியினரை மலை மேல் செல்ல தமிழக காவல்துறை மறுத்து விட்டது. மேலும் மலை மேல் செல்ல முயன்ற, போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட இந்து முன்னணியினர், பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், 'தனி நீதிபதியின் உத்தரவால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கார்த்திகை தீபம் ஏற்ற அரசு எந்த தடையும் விதிக்கவில்லை. 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றுவதை விட்டு விட்டு வேறு இடத்தில் தீபம் ஏற்ற கேட்பது தான் பிரச்சனை' என்று கூறப்பட்டுள்ளது.
மனுவில் கூறப்பட்டுள்ளது என்ன?
இதேபோல் ராம ரவிக்குமார் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன தீர்ப்பு வரும்?
இந்த விசாரணையின்போது உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்குமா? அல்லது உயர்நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு செயல்படுத்த சொல்லுமா? என்பது தெரியவரும். ஒட்டுமொத்தத்தில் திருப்பரங்குன்றம் இப்போது இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.