
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறது. வறுமை ஒழிப்பு, தரமான கல்வி, சுத்தமான குடிநீர், தொழில் கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி வேலை வாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம், சாலை வசதிகள் என அனைத்து வசதிகளையும் தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகிறார். இது தவிர, மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன் திட்டம், மகளிர் இலவச பஸ் பயணம், காலை உணவுத் திட்டம் பல்வேறு திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிக வேகமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மின்னணு ஏற்றுமதி
இந்நிலையில் 2024-25 நிதியாண்டில் மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் 14.65 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
மின்னணு ஏற்றுமதியில் வரலாற்று சாதனை
இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கடந்த 2024-25 நிதியாண்டில் மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் 14.65 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இது இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 41.23 சதவீதம் அதிகமாகும். மாநிலத்தின் ஒட்டுமொத்த மின்னணு சுற்றுச்சூழல் அமைப்புக்கும் வாழ்த்துகள்.
இது வெறும் ஆரம்பம் தான்
இது உண்மையிலேயே பெருமைக்குரிய தருணம். கடந்த ஆண்டு 9.56 பில்லியனிலிருந்து இந்த ஆண்டு 14.65 பில்லியனாக 53 சதவீதம் மகத்தான வளர்ச்சி. இது வெறும் ஆரம்பம் தான். மின்னணு ஏற்றுமதியில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இதோ வருகிறோம் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.