பேச்சுவார்த்தை என்று கூறி எடப்பாடி அணியினர் கபட நாடகம் ஆடுகிறார்கள் – பந்தா காட்டும் பன்னீர்செல்வம்…

First Published May 13, 2017, 8:12 AM IST
Highlights
Talking to the team the dancers are playing a drama - the paneers show


சேலம்

தினகரனை நீக்கிவிட்டோம் என்று கூறி பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தால், தினகரன் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி எடப்பாடி அணியினர் கபட நாடகம் ஆடுகிறார்கள் என்று ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் கோட்டை மைதானத்தில், சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக.புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழா, கட்சி வளர்ச்சி குறித்த பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ.செம்மலை தலைமை வகித்தார். எஸ்.கே.செல்வம் வரவேற்றார்.

இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியது: “தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோருக்கு பின்பு மூன்றாம் தலைவராக ஜெயலலிதா விளங்கியது வரலாறு கூறும்.

1972–ஆம் ஆண்டில் அ.தி.மு.க.வை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். அதன்பிறகு அவர் 3 முறை முதலமைச்சராக ஆட்சி கட்டிலில் இருந்துள்ளார். அவரது மறைவுக்கு பின் கடந்த 27 ஆண்டுகளாக கட்சியின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தார்.

அந்த காலக்கட்டத்தில் அ.தி.மு.க.வை அழித்துவிட வேண்டும் என்று தி.மு.க.தலைவர் கருணாநிதி பல்வேறு இன்னல்களை கொடுத்தார். ஆனால், அதையும் முறியடித்து இந்தியாவில் தலைசிறந்த தலைவராக ஜெயலலிதா இருந்துள்ளார்.

குறிப்பாக சொல்லபோனால் எம்.ஜி.ஆர்.விட்டு சென்றபோது இந்த இயக்கத்தில் 17 இலட்சம் தொண்டர்கள் மட்டும் இருந்தார்கள். ஆனால், எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு 28 ஆண்டுகளில் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, தற்போது அ.தி.மு.க.வில் 1½ கோடி தொண்டர்களை உருவாக்கிய பெருமை அவருக்குண்டு.

அ.தி.மு.க. தொண்டர்கள் இயக்கமாகவும், ஆட்சி மக்கள் ஆட்சியாகவும் இருக்க வேண்டும் என்றும், ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சியும், ஆட்சியும் இருக்கக்கூடாது என்றும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா தெரிவித்து வந்தனர். ஆனால், அவர்கள் கண்ட இலட்சியம், பாதை இப்போது எங்கே சென்று கொண்டிருக்கிறது? சசிகலா, தினகரன் என ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சி சென்றுவிட்டது. அதை மீட்டெடுக்க வேண்டும்.

கட்சியை ஒருபோதும் ஒரு குடும்பத்தின் பிடியில் அடகு வைக்க விடமாட்டோம். தொண்டர்கள் விருப்பம் எதுவோ? அதன்படியே எங்களது பயணம் இருக்கும்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் ஏற்பட்டுள்ள மர்ம முடிச்சு விலக்கப்பட வேண்டும். அதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதற்காக அவரது மரணம் குறித்து நீதி விசாரணை அமைத்து மத்திய புலனாய்வு கமி‌ஷன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தோம்.

ஆட்சியில் இருப்பவர்கள் 122 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு எப்படியும் இன்னும் 4 ஆண்டுகளுக்கு மெல்ல மெல்ல ஆட்சியை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். 32 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் ஆளுக்கட்சியான அ.தி.மு.க.மீண்டும் ஆட்சியை அமைக்க வழிவகை ஏற்படுத்தி கொடுத்தவர் ஜெயலலிதா. ஆனால், தற்போது ஆட்சி எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.

காஞ்சீபுரத்தில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே சட்டமன்ற தேர்தல் வரலாம்? என்று நான் ஒரு கருத்தை தெரிவித்தேன். அதற்கு அந்த அணியில் இருப்பவர்கள் வசைபாடுகிறார்கள். ஆனால், ஆட்சியை கலைக்கும் சூழலை நாங்கள் ஒருபோதும் உருவாக்க மாட்டோம். அதேசமயம் இரட்டை இலை சின்னத்தை பெற தர்மயுத்தம் தொடரும்.

தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துவிட்டோம் என்று முதலில் கூறினார்கள். இதனால் இரு அணிகள் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார் என்று தெரிவித்தோம். ஆனால், தற்போது அவர்கள் கபட நாடகம் ஆடுகிறார்கள்.

தினகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அமைச்சர்கள் தினமும் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்து குழப்பி வருகிறார்கள்.

1972–ம் ஆண்டில் தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆரை கருணாநிதி தூக்கி எறிந்தபோது, அவருடன் ஒரு எம்.எல்.ஏ.மட்டுமே இருந்தார். அதன்பிறகு 1975–ல் எம்.ஜி.ஆர் ஆட்சி அமைக்க முடிந்தது. அதன்பிறகு 3 முறை அவரது ஆட்சியை யாராலும் ஒன்றும் செய்யமுடியவில்லை.

தற்போது நிர்வாகிகள் மட்டுமே அவர்களிடம் இருக்கிறார்கள். ஆனால் நம்மிடம் கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆசி இருப்பதால் அவர்களது பாதையில் நமது இலட்சிய பயணம் தொடரும்.

தவறான பாதையில் சென்று கொண்டிருப்பவர்கள், அவர்களது பாதையை மாற்றிக்கொண்டு எங்கள் பக்கம் வந்தால் அவர்களை மக்கள் மதிப்பார்கள். அப்படி வராவிட்டால் அரசியலில் அனாதையாகி விடுவார்கள்” என்று அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. வெள்ளி செங்கோல் நினைவு பரிசாக வழங்கினார். மேலும், கூட்டத்தில் பாண்டியராஜன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன். பொன்னையன், பி.ஆர்.சுந்தரம் எம்.பி.உள்பட பலர் பங்கேற்றனர்.

tags
click me!