
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தாண்டு 93.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், கடந்த ஆண்டு தேர்ச்சி 96.73 சதவீதம் ஆகும். இது, கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு 3.18 சதவீதம் குறைந்துள்ளது என்பதை காட்டுகிறது.
தமிழகத்தில் 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் தேர்வு முடிவு நேற்று வெளியாயின.
மாணவர்களை மன உளைச்சலில் இருந்து தடுக்க மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவ, மாணவிகளின் விவரம் வெளியிடப்படாது என்று அரசு அறிவித்தது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து நேற்று காலை முதலே தேர்வு முடிவு குறித்த விவரம், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சரியாக காலை 10 மணிக்கு அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் தேர்வு முடிவு வெளியானது. பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டன.
பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த பொதுத்தேர்வில் 4 ஆயிரத்து 664 மாணவர்களும், 4 ஆயிரத்து 547 மாணவிகளும் என மொத்தம் 9 ஆயிரத்து 211 பேர் தேர்வு எழுதினர்.
இதில் 4 ஆயிரத்து 323 மாணவர்களும், 4 ஆயிரத்து 294 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 617 பேர் தேர்ச்சிப் பெற்று அசத்தியுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 93.55 சதவீதம் ஆகும். மாநில அளவில் தேர்ச்சி தரவரிசை பட்டியலில் பெரம்பலூர் மாவட்டம் 15-வது இடம் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 96.73 ஆகும். கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு 3.18 சதவீதம் குறைந்துள்ளது.
கணிதம், வேதியியல், உயிரியியல், இயற்பியல், கணினி அறிவியல், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் ஒகேசனல் தியரி உள்ளிட்ட பாடங்களில் மொத்தம் 137 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் புதியமுறை இந்த ஆண்டு கொண்டு வரப்பட்டதால் மாணவர்கள் அதிகம் பெற்ற மதிப்பெண்கள் விவரம் வெளியிடப்படவில்லை. மாணவர்களின் மதிப்பெண்கள் விவரம் அனைத்தும் அந்தந்த பள்ளிகளுக்கு இ.மெயில் மூலமாக அனுப்பப்பட்டதாக கல்வித்துறை அதிகாரிகள் சொல்லுகின்றனர்.