
புதுக்கோட்டை
பலமுறை புகார் கொடுத்தும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியரிடம் மனு கொடுத்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் மக்கள் மனு கொடுத்தனர்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கணேஷ் தலைமை தாங்கினார். அவர், மக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.
இந்தக் கூட்டத்தில் மணமேல்குடி அருகே சீகனேந்தல் மற்றும் திருநாராயணமங்களம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், "எங்கள் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் எங்கள் ஊரில் உள்ள ஏரி, குளம் குட்டையில் சிறிதளவும் தண்ணீர் இல்லை. இதனால் கால்நடைகளும் மக்களும் குடிநீரின்றி தவித்து வரும் அவல நிலை உள்ளது.
மேலும், சுமார் 4 கிலோமீட்டர் தூரம் பெண்கள் நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மனு கொடுத்தோம்.
இதனையடுத்து நட வடிக்கை எடுக்க மணமேல்குடி ஒன்றிய அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது. இருப்பினும் இதுவரை எங்களுக்கு குடிநீர் கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, எங்கள் பகுதியில் குடிநீர் கிடைக்க இப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தரவேண்டும்" என்று அதில் கூறப்பட்டிருந்தது.