
சென்னை சில்க்ஸில் ஏற்பட்ட தீ விபத்தால் தியாகராயர் பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆளாவதால் அப்பகுதியை விட்டு குடியிருப்பு வாசிகள் வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
சென்னையின் மையப் பகுதியான தியாகராயர் நகர் பகுதியில் இருந்த சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று அதி காலை தீப்பிடித்தது.
தொடர்ந்து 30 மணி நேரமாக தீபற்றி எரிவதால் வரலாறு காணாத அளவுக்கு புகை மூட்டம் உள்ளதால் அப்பகுதி மக்களை உடனடியாக வெளியேறுமாறு காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
சென்னை சில்க்ஸ் அருகே 500 மீட்டர் தொலைவுக்குள் வசிக்கும் பொது மக்கள் அங்கே இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அப்பகுதி குடியுருப்பு வாசிகள் வீடுகளில் இருந்த வெளியேறி வருகின்றனர். மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்றவற்றில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர்.
தீ விபத்தால் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்கும் வகையில் இரண்டு, மூன்று நாட்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக சென்னை சில்க்ஸ் கட்டடம் அருகில் குடியிருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்