11, 12-ம் வகுப்புகளுக்கு “சிலபஸ்” மாற்றும் பணி தீவிரம் - நீட் தேர்வை எதிர்கொள்ள தயாராகிறது தமிழகம்

First Published Apr 13, 2017, 9:10 AM IST
Highlights
syllabus change for HSC students


மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தமிழக மாணவர்களை தயார்படுத்த, 11, 12-ம் வகுப்பு பாடத்திட்டங்களை(சிலபஸ்) என்.சி.இ.ஆர்.டி. தரத்துக்கு ஏற்ப மாற்றும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 ஆதலால், 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் மாற்றம் கொண்டு வரப்படலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு என்ற ‘நீட்’ தேர்வு நடத்தப்படுகிறது. வருகிற மே 7-ந் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடக்கிறது.



நீட் தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்கள் பாதிப்பு அடைவார்கள் என்றும் அதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்பட்டது.

இதையடுத்து தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து தமிழகத்தின் அரசு மருத்துவம் மற்றும் பல மருத்துவ கல்லூரிகளுக்கு விலக்கு பெற சட்ட மசோதா சட்டசபையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அந்த சட்ட மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது ஆனால் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால், தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடப்பது உறுதியாகி உள்ளது

இந்நிலையில், அடுத்தவரும் ஆண்டுகளில் தமிழக மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், பாடத் திட்டங்களை மாற்றும் பணியில் மாநில கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக் கவுன்சில் (எஸ்.சி.இ.ஆர்.டி.) ஈடுபட்டுள்ளது.

இதற்காக நாள்தோறும் ஏராளமான பேராசிரியர்கள் 11, 12ம் வகுப்பு பாடத்திட்டங்களை என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்துக்கும், தமிழக மாநில பாடத்திட்டத்துக்கும் இடையிலான வேறுபாடுகளைக் கண்டறிந்து மாற்றி அமைக்கும் பணியைத் தொடங்கிஉள்ளனர்.

குறிப்பாக அறிவியல் பாடங்களான தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல் பிரிவுகளில் ஒவ்வொரு பாடங்களையும், என்.சி.ஆர்.இ.டி. பாடத்தோடு ஒப்பிட்டு வேறுபாடுகள் காணப்பட்டு வருகிறது.  

தமிழகத்தின் 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம்(சிலபஸ்) மாற்றம் செய்து ஏறக்குறைய 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், நீட் தேர்வுக்கு தயார் படுத்தும் வகையில் பாடத் திட்டத்தில் மாற்றங்களை செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்னும் உறுதியான முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை.

கல்வித்துறை அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டபோது, “ நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் வகையில், தனித்துவமான பாடங்களைக் கொண்டதாக பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

இது குறித்து பாடத்திட்டங்களை தயார் செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ள ஆசிரியர்கள் தரப்பில் கூறுகையில், “ என்.சி.இ.ஆர்.டி. பாடப் புத்தகங்களுக்கும், தமிழகத்தின் பாடப் புத்தகங்களுக்கும் இடையே ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன.

தமிழக அரசின் மாநிலக் கல்வி பாடத்திட்டம் என்பது, ஒரு குறிப்பிட்ட பாடங்களை அடிப்படையைக் கொண்டது. ஆனால், என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகங்கள் என்பது, பாடங்களை எப்படி செயல்பாட்டில் கொண்டுவருவது என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, மாநிலக் கல்வியில் 11ம் வகுப்பு உயிரியல் பாடத்தில், உடற்கூறியல்(அனாடமி) குறித்தும், 12-ம் வகுப்பில் உடலியலைப் குறித்து இருக்கும்.

ஆனால், என்.சி.இ.ஆர்.டி. பாடப் புத்தகங்கள் இதில் இருந்து முற்றிலும் வித்தியாசமான வகையில், பல்வேறு பரிவுகளில் தரப்பட்டுள்ளது. இப்போது இதில் உள்ள வேறுபாடுகளைக் கண்டறிந்து வருகிறோம்.” என்று தெரிவித்தனர்.

இப்போதுள்ள சூழலில் 11,12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது, அதேசமயம், கீழ்வகுப்புகளுக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

click me!