
தஞ்சாவூர்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுயுத்தி 16–வது நாளாக போராடும் விவசாயிகளிடம், “போராட்டத்தை கைவிட்டு விட்டு வாருங்கள். முதலமைச்சரை சந்திக்க அனுமதி வாங்கி தருகிறோம்” என்று அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் வைத்தியலிங்கள் கேட்டனர்.
அதற்கு, “எங்களது கோரிக்கைகளை நீங்களே முதலமைச்சரிடம் தெரிவியுங்கள். அதுகுறித்து முதலமைச்சர் அறிக்கை வெளியிட்ட பின்னர் எங்களது போராட்டம் குறித்து ஒரு முடிவுக்கு வருகிறோம்” என்று கூறி விவசாயிகள், அமைச்சரை வாயடைக்க வைத்தனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுயுத்தி 16–வது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் அமைச்சர் துரைக்கண்ணு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முதல்–அமைச்சரை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
காவிரி உரிமை மீட்புக்குழு தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கடந்த 28–ஆம் தேதி தொடர் போராட்டத்தைத் தொடங்கின. இரவு, பகல் என பாராது இந்தப் போராட்ட்டம் தொடர்கிறது. நேற்றோடு இந்த போராட்டம் 16 நாள்களை தொட்டது.
“உச்சநீதிமன்றம் உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்.
விளை நிலங்களில் எண்ணெய், எரிவாயு எடுக்க அனுமதிக்கக் கூடாது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
காவிரி சமவெளியை பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஒற்றை தீர்ப்பாயம் கொண்டு வரும் முடிவை கைவிட வேண்டும்.
தண்ணீர் இன்றி கருகிய நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், தரிசாக போடப்பட்ட நிலத்திற்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரமும், விவசாய தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும்.
கருகிய நெற்பயிரை பார்த்து அதிர்ச்சியில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.15 இலட்சம் வழங்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தினர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை பல்வேறுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் அமைப்பினர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., ஆட்சியர் அண்ணாதுரை, எம்.ரெங்கசாமி எம்.எல்.ஏ., காவல் கண்காணிப்பாளர் மகேஷ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் நேற்று போராட்டக் களத்திற்கு வந்தனர்.
பின்னர், அவர்கள், காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் சி.முருகேசன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ் மற்றும் விவசாயிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறியது:
“காவிரி தீர்ப்பாயத்தை கலைத்துவிட்டு, அதன் இறுதித் தீர்ப்பை ரத்து செய்யப் போவதாகவும், ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கப் போவதாகவும், அதில் புதிதாக காவிரி வழக்கை விசாரிக்க தமிழக அரசு மனு போடலாம் என்றும் மத்திய மந்திரி உமாபாரதி பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்துள்ளார்.
இந்த மசோதாவை எதிர்த்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. இதை வன்மையாக எதிர்க்கிறோம் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை ஏன்? வலியுறுத்தவில்லை என்றார்.
இதற்கு அமைச்சர் துரைக்கண்ணு, “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. ஒற்றை தீர்ப்பாய மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதை எதிர்த்து பாராளுமன்றத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.பி.க்கள் குரல் கொடுப்பார்கள்” என்று பதிலளித்தார்.
இதற்கு வைத்திலிங்கம் எம்.பி., “காவிரி பிரச்சனையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்படி என்ன நடவடிக்கை எடுத்தாரோ அந்த அடிச்சுவடி மாறாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு என்னென்ன திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தாரோ அந்த திட்டங்களை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தும்” என்றுத் தெரிவித்தார்.
அறவழியில் போராடும் உங்களது போராட்டம் குறித்து தினமும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உங்கள் கோரிக்கைகளில் வறட்சி நிவாரணம் உள்பட பாதி கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்கிறோம். போராட்டத்தை கைவிட்டு விட்டு வாருங்கள். முதலமைச்சரை சந்திக்க அனுமதி வாங்கி தருகிறோம் என்று வைத்தியலிங்கம் கேட்டுக் கொண்டார்.
அதற்கு மணியரசன்: நீங்கள் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது கோரிக்கைகளை நீங்களே முதலமைச்சரிடம் தெரிவியுங்கள். ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கக் கூடாது என்று முதலமைச்சர் அறிக்கை வெளியிட வேண்டும். அதன்பின்னர் தான் எங்களது போராட்டம் குறித்து ஒரு முடிவுக்கு வர முடியும்" என்று கூறி அமைச்சரை வாயடைக்க வைத்தார்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் உங்களது கோரிக்கைகளை முதலமைச்சரிடம் தெரிவிப்பதாக கூறிவிட்டு அமைச்சர் துரைக்கண்ணு உள்ளிட்டவர்கள் அங்கிருந்து நைசாக புறப்பட்டனர்.