தமிழ்நாடு அமைச்சர் பொன்முடியின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது
அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996 முதல் 2001ம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சி காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2002ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி உட்பட மேலும் ஐந்து பேர் சேர்க்கப்பட்டனர்.
விழுப்புரத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி அவர்கள் அனைவரையும் கடந்த ஜூன் 28ஆம் தேதி விடுவித்து உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தார். மேலும், இந்த வழக்கை மறு ஆய்வு செய்து தாமே விசாரிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
நீட் விலக்கு நம் இலக்கு: திருமாவளவன் ஆதரவு தெரிவித்து கையெழுத்து!
இதை எதிர்த்து அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
வழக்கு விசாரணையின்போது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள், நீதித்துறையில் உள்ளதற்கு கடவுள்களுக்கு நன்றி என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கருத்து தெரிவித்தார்.