ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் குற்றச்சாட்டுகள் தீவிரமானது - உச்ச நீதிமன்றம்!

By Manikanda Prabu  |  First Published Nov 10, 2023, 2:25 PM IST

ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் குற்றச்சாட்டுகள் தீவிரமானது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்


பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் ஆளுங்கட்சிக்கு குடைச்சல் கொடுப்பதாகவும், எதிர்க்கட்சி அரசுகள் ஆளும் மாநிலங்களில் மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க கால தாமதம் செய்வதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதனிடையே, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, அவர் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறி  தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ் இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

Tap to resize

Latest Videos

அதில், “தமிழ்நாடு மாநில சட்டமன்றம் அவரது ஒப்புதலுக்காக அனுப்பிய மாநில அரசின் கோப்புகள், உத்தரவுகள் மற்றும் கொள்கைகளை ஆளுநர் பரிசீலிக்காதது அரசியலமைப்பிற்கு எதிரானது, சட்டவிரோதமானது, தன்னிச்சையானது, நியாயமற்றது.” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், கேரளா, பஞ்சாப் ஆகிய மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்தன.

இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில்,  மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் முகுல் ரோஹத்கி ஆஜராகினர். அப்போது, அரசியல் சாசன பிரிவுகள் 200 மற்றும் 163இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை ஆளுநர் தவறாகப் பயன்படுத்துவதாக தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.

மேலும்,  12 மசோதாக்கள், 3 துணைவேந்தர்கள் நியமனம் மற்றும் 4 நடவடிக்கை உத்தரவுகள், 54 கைதிகளின் முன்கூட்டிய விடுதலை தொடர்பான கோப்புகள், டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமன கோப்பு உள்பட அரசு பணிகளில் முக்கியமான 14 காலிப்பணியிடங்களில் 10 பணியிடங்கள் ஆளுநரால் நிரப்பப்படாமல் உள்ளன எனவும் தமிழ்நாடு அரசு தரப்பு சுட்டிக்காட்டியது.

அமர்பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தொடர்ந்து, மசோதாக்கள் எப்போது தாக்கல் செய்யப்பட்டன? எத்தனை நாட்கள் நிலுவையில் உள்ளன? என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த தமிழக அரசு, 2020 ஆம் ஆண்டு முதல் மசோதாக்கள் கிடப்பில் இருக்கிறது பணி நியமனம் தொடங்கி எந்த ஒரு கோப்புகளுக்கும் அனுமதி கொடுக்க ஆளுநர் மறுப்பு தெரிவிக்கிறார். கிடப்பில் போட்டு வைத்து அரசாங்கத்தின் செயல்பாடுகளை முடக்கி வைக்கிறார் என குற்றம் சாட்டியது.

சிறைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்புகளை கூட தமிழ்நாடு ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார் இது அரசின் உரிமைகளை பறிக்கும் விஷயம் என்று ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் விஷயம் எனவும் தமிழ்நாடு அரசு வாதிட்டது.

இதையடுத்து, பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநரால் நிறுத்தி வைக்க முடியாது என தெரிவித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் குற்றச்சாட்டுகள் தீவிரமானது என்றது. தமிழ்நாடு ஆளுநர் செயல்படாமல் இருக்கிறார் என குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து இருக்கக்கூடிய வழக்குகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது; தீவிரமானது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து, ஏன் கோப்புகளின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் நிலுவையில் வைத்திருக்கிறார் என ஆளுநர் செயலாளர், மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 13ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்து.

click me!