
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு கட்சியின் கொடிக் கம்பம் நிறுவப்பட்ட விவகாரத்தில், பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவராகவும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுபவருமான உள்ள அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமர் பிரசாத் ரெட்டியை மேலும் மூன்று வழக்குகளில் போலீஸார் கைது செய்தனர். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின்போது வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தின் மீது பிரதமர் மோடியின் படத்தை ஒட்டிய புகாரிலும், வள்ளுவர் கோட்டம் முன்பு பாஜக நடத்திய போராட்டத்தின்போது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்ததாக பதியப்பட்ட வழக்கிலும், தென்காசி மாவட்டத்தில் நடந்த என் மண், என் மக்கள் பாத யாத்திரை நிகழ்ச்சியின் போது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.
இதில், செஸ் ஒலிம்பியாட், தென்காசி வழக்குகளில் அமர்பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. ஆனால், மற்ற இரண்டு வழக்குகளில் ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில், கொடிக் கம்பம் சேதப்படுத்திய வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில், அவரது ஜாமீன் மனுவை செங்கல்பட்டு கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறியீடு செய்திருந்தார். அதில், சென்னை புழல் சிறையில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமர்பிரசாத் ரெட்டி உள்பட ஆறு பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. தீபாவளிக்கு முன்னதாக அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளதால், அவர் சிறையில் இருந்து வெளியே வந்து தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடுவார் என பாஜகவினர் சமூக வலைதளங்களில் உற்சாகத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.