உச்சநீதிமன்ற உத்தரவுபடி அணைகள் ஆய்வு – இன்று தஞ்சைக்கு செல்லும் மத்திய நிபுணர் குழு

 
Published : Oct 10, 2016, 09:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
உச்சநீதிமன்ற உத்தரவுபடி அணைகள் ஆய்வு – இன்று தஞ்சைக்கு செல்லும் மத்திய நிபுணர் குழு

சுருக்கம்

உச்சநீதிமன்ற உத்தரவின்படி மத்திய நிபுணர் குழுவினர் நேற்று மேட்டூர், பவானிசாகர் அணைகளை பார்வையிட்டனர். இன்று அவர்கள் தஞ்சை செல்கிறார்கள்.

கர்நாடக அரசு, காவிரியில் தண்ணீர் திறந்து விடவேண்டும் என உத்தரவிடக்கோரி  உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இரு மாநிலங்களிலும் காவிரி படுகையில் உள்ள அணைகளின் நீர் இருப்பு, நீர்வரத்து மற்றும் தண்ணீர் தேவை ஆகியவை பற்றி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்மட்ட தொழில்நுட்ப குழு ஒன்றை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்பேரில் தேசிய நீர்வள ஆணைய தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையில் நிபுணர்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த குழுவில் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் இடம்பெற்று உள்ளனர்.

இந்த நிபுணர்கள் குழுவினர் கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் கர்நாடகத்தில் காவிரி பாசன பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து அணைகளை பார்வையிட்டனர். அங்கு ஆய்வுப்பணியை முடித்துக்கொண்டு, நேற்று முன்தினம் இரவு சேலம் வந்தனர்.

தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை, நிபுணர்கள் குழுவின் தலைவர் ஜி.எஸ்.ஜா மற்றும் உறுப்பினர் களை சந்தித்து பேசினார்.

அப்போது, போதிய தண்ணீர் இல்லாததால் காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டு இருப்பது குறித்தும், இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் அவர் விளக்கி கூறினார். அத்துடன், தமிழக விவசாயிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி கொடுக்குமாறு கேட்டுக்கொண்டு, காவிரி பாசன பகுதி குறித்த விவர அறிக்கையை நிபுணர் குழுவினரிடம் கொடுத்தார்.

இந்த சந்திப்பின் போது, காவிரியில் தண்ணீர் வராததால் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து படக்காட்சி மூலம் நிபுணர் குழுவினருக்கு விளக்கப்பட்டது.

இதை தொடர்ந்து நிபுணர்கள் குழு, மேட்டூர் அணையை பார்வையிட்டனர். காலை சுமார் 11.30 மணி அளவில் அணையின் 16 கண் பாலம், இடதுகரை வழியாக அணையின் வலது கரைக்கு வந்த நிபுணர் குழுவினர், அங்கு நீர்மட்டம் அளவிடும் பகுதிக்கு சென்று அணையை பார்வையிட்டனர்.

அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்டம், நீர்வரத்து, வெளியேற்றம், பயன்படுத்த முடியாத நீரின் அளவு குறித்த விவரங்களை மத்திய குழுவினரிடம் விளக்கி கூறினார்கள். அந்த சமயத்தில் அங்கு வந்த விவசாயிகள், தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுவை நிபுணர் குழுவினரிடம் அளித்தனர்.

பின்னர், நிபுணர் குழுவின் தலைவர் ஜி.எஸ்.ஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2 நாட்களாக கர் நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் மற்றும் காவிரி படுகை பகுதியை நேரில் சென்று பார்வையிட்டோம். அந்த மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நிலைமைகளை கேட்டு அறிந்தோம். இப்போது தமிழகத்தில் உள்ள காவிரி பாசன நீர் ஆதாரங்கள் மற்றும் டெல்டா பகுதிகளை பார்வையிடுகிறோம்.

மேட்டூர் அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். விவசாயிகள் தங்களின் நிலை மற்றும் தேவைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். முன்னதாக சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் துறைச் செயலாளர்கள் தமிழக பாசனத்துக்கு தேவையான நீர், தற்போதுள்ள சூழ்நிலை குறித்து விளக்கி கூறினார்கள்.

இரு மாநிலங்களிலும் மேற்கொண்ட ஆய்வு பற்றிய அறிக்கையை வருகிற 17ம் தேதிஉச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். இது நீதிமன்ற உத்தரவு என்பதால் வேறு எந்த கருத்தையும் தெரிவிக்க இயலாது என்றார்.

இதையெடுத்து, நிபுணர்கள் குழுவினர் மேட்டூர் அனல்மின் நிலைய ஆய்வு மாளிகையில் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுத்துவிட்டு ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையை பார்வையிட கிளம்பிச்சென்றனர்.
மதியம், 3 மணியளவில் பவானிசாகர் அணைக்கு சென்ற நிபுணர்கள் குழுவினர் மற்றும் அதிகாரிகள் அணை பூங்கா வழியாக அணைக்கு காரில் சென்றனர். அணையின் மேல் பகுதிக்கு சென்று காரில் இருந்து இறங்கி பார்வையிட்டனர்.

அங்குள்ள நீர் வரத்து கணக்கிடும் அறைக்கு சென்ற அதிகாரிகள் தினசரி நீர்வரத்து பட்டியலை பார்வையிட்டு சரிபார்த்தனர். மேலும் தற்போதைய நீர்வரத்து நிலவரம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். பாசனப்பகுதியின் தண்ணீர் தேவை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தனர்.
ஆய்வுப்பணியின் போது, பவானி நதிநீர் பாதுகாப்பு குழு தலைவர் சின்னத்தம்பி மற்றும் விவசாயிகள் நிபுணர் குழுவினரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் அட்டப்பாடி, சிறுவாணி தொடர்பான கோரிக்கைகளும், பவானி ஆற்றில் ஆலைக்கழிவுகள் கலப்பதை தடுப்பது தொடர்பான கோரிக்கையும் இடம்பெற்று இருந்தது.

பவானிசாகர் அணையில் இருந்து புறப்பட்ட நிபுணர் குழுவினர் கோபி அருகே உள்ள பங்களாபுதூர் ரோடு தடப்பள்ளி வாய்க்கால் பகுதி வயல்வெளிகளின் தற்போதைய நிலமையை பார்வையிட்டனர். அப்போது விவசாயிகள் பிடுங்கி வந்த வாடிய நாற்றுகளை, நிபுணர் குழுவினரிடம் காட்டி விளக்கினார்கள்.

தொடர்ந்து நிபுணர் குழுவினர் கவுந்தப்பாடி அருகே எல்லீஸ்பேட்டையில் உள்ள ரெட்டைவாய்க்கால் பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது விவசாயிகளின் கோரிக்கைகளை அவர்கள் கேட்டு அறிந்தனர். ஆய்வுப்பணியை முடித்த நிபுணர் குழுவினர் மாலையில் திருச்சி புறப்பட்டு சென்றனர்.

நேற்று இரவு திருச்சியில் தங்கிய நிபுணர் குழுவினர் இன்று தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு சென்று காவிரி டெல்டா பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!