
பண்ருட்டியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை, மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள ஆர்.எஸ். நகரில் வசிப்பவர் சுலைமான். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு யாஸ்மீன் என்பருக்கும் திருமணம் நடந்தது. சுலைமான், அருகில் உள்ள ஒரு ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வழக்கம்போல் காலை வேலைக்கு சென்றுள்ளார் சுலைமான்.
சுலைமான் வசிக்கும் வீட்டின் அருகே, யாஸ்மினின் தாய் பர்வீன் வசித்து வருகிறார். நேற்று சுமார் 3 மணியளவில் மகள் யாஸ்மீனுக்கு போன் செய்துள்ளார். ஆனால், போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. சிறிது நேரம் கழித்து பர்வீன் மீண்டும் போன் செய்துள்ளார். ஆனாலும், செல்போன் ஆப் செய்யப்பட்ட நிலையிலேயே இருந்துள்ளது. இதையடுத்து, யாஸ்மீனை பார்க்க வீட்டுக்கு சென்றுள்ளார் பர்வீன்.
வீட்டுக்கு சென்ற பர்வீனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் முன்பக்க கதவு திறந்திருந்த நிலையில், உள்ளே சென்றுள்ளார் பர்வீன். அப்போது, படுக்கையறையில் யாஸ்மீன் அலங்கோலமான நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த அவர், கூச்சலிட்டபடியே வெளியே ஓடி வந்துள்ளார்.
யாஸ்மீன் கொலை செய்யப்பட்டு கிடப்பது குறித்து சுலைமானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த சுலைமானும் மனைவி கொலை செய்யப்படிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் குறித்து, பண்ருட்டி போலீசாருக்கு அருகில் உள்ளவர்கள் தெரிவித்தனர். பின்னர் போலீசார், யாஸ்மீனின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், யாஸ்மீன் அணிந்திருந்த தாலி, மோதிரம், வெள்ளிக் கொலுசு உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
அந்த அறையில் பதிந்திருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை தடயவியல் நிபுணர், தடயங்களைச் சேகரித்துக் கொண்டார். மோப்ப நாயும், வீட்டில் இருந்து சிறிது தூரம் வரை ஓடிச் சென்று நின்று விட்டது.
இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் யாஸ்மீனை யாரேனும் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது கொள்ளையின்போது யாஸ்மீன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.