தமிழக அரசு குறித்து சமூகவலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட சப்இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, பூக்கடை காவல் நிலையத்தில், காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் சேகர்.இவர் சமீபத்தில், 'பேஸ்புக்' வலைதளத்தில், தன் நண்பரின் பதிவு ஒன்றுக்கு பதில் அளித்திருந்தார்.அதில் சேகர், 'தமிழ் என்ற காட்டுமிராண்டி மொழில ஒருத்தன் 5,௦௦௦ ரூபாய் கொடுக்கச் சொன்னான். வந்தா அதை காணோம். அதைக் கேளுங்கடா என்றால், புரியாத ஹிந்திமொழியில பேசியதை.. ஏதோ புரிஞ்ச மாதிரி... சொல்லாத லட்சத்தை கேட்கிறான் பாருங்க கொத்தடிமை’ என பதிவு செய்திருந்தார்.
தமிழக காவல் துறைக்கும், காவலர்களுக்கும் நன்மை செய்து வரும் அரசு குறித்து, காவலர் இப்படி பதிவு செய்வது நியாயமா என, ஒருவர், 'பேஸ்புக்'கில் கேள்வி எழுப்பி இருந்தார்.இப்படி, அடுத்தடுத்து கேள்வி பரிமாற்றம் நடந்துள்ளது. இதையறிந்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இதில், உதவி ஆய்வாளர் சேகர், சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டிருந்தது உறுதியானது. இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டார்.காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் ஒருவரே தமிழக முதலமைச்சரை சமூகவலைதளத்தில் மறைமுகமாக சாடியிருப்பது காவல்துறை வட்டாரத்தில்பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.