சத்து மாத்திரை மற்றும் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு மயக்கம்,வயிற்றுவலி.. மருத்துவமனையில் அனுமதி..

By Thanalakshmi VFirst Published Jun 24, 2022, 3:29 PM IST
Highlights

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் அரசு பள்ளியில் வழங்கப்பட்ட இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென்று வயிற்று வலி, மயக்கம் ஏற்பட்டதால், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த படி அக்ரகாரம் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாளில் மாணவர்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. அதன்படி, இன்று காலை 11 மணியளவில், மருத்துவ குழுவினர்  6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 68 மாணவ - மாணவிகளுக்கு இரும்பு சத்து மாத்திரை வழங்கியுள்ளனர். 

இந்த மாத்திரைகளை மாணவர்கள் உட்கொண்டதாக சொல்லபடுகிறது. தொடர்ந்து பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு மற்றும் முட்டை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே மாத்திரை எடுத்துக்கொண்ட மாணவர்களுக்கு திடீரென்று லேசான தலைசுற்றல், மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளியின் தலைமையாசிரியர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து, மாணவர்களை மீட்டு, காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் படிக்க:MK Stalin : இனி உள்ளூரிலே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. முதல்வர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ் !

தொடர்ந்து அடுத்தடுத்தாக சத்து மாத்திரை மற்றும் சத்துணவு சாப்பிட்ட 24 மாணவிகள் என 43 பேருக்கு தலை சுற்றல், வயிற்று வலி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அங்கு அவர்களை மருத்துவர்கள் பரிசோதித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார பணிகள் துணை இயக்குநர் செல்வகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர், அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட மாணர்வர்களுக்கு ஆறுதல் கூறிய கலசபாக்கம் தொகுதி எம்எல்ஏ சரவணன்,  செய்தியாளர்களிடம் கூறுகையில், இரும்புச்சத்து மாத்திரையால் பிரச்னையில்லை என்றும் பள்ளிக்கு வழங்கப்படும் தண்ணீர் மற்றும் மதிய உணவு ஆகியவற்றை பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளதாக கூறினார். மேலும்  கிராமத்திலே தங்கி மருத்துவ குழுவினர் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தெரிவித்திருப்பதாக கூறினார். மேலும் இந்த சம்பவம் குறித்து பாய்ச்சல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

மேலும் படிக்க: கல்லூரி பேருந்து லாரி மீது மோதி விபத்து.. குடிபோதையில் ஓட்டுநர் இருந்ததாக குற்றச்சாட்டு.. 13 மாணவிகள் காயம்..

click me!