
அண்ணா பல்கலைக்கழக முறைகேடை கண்டித்து இன்று கிண்டியில் ஆர்பாட்டம் நடத்திய மாணவர்களை போலீஸ் கையாண்ட விதம் தமிழக மாணவர்களை கொதிக்க வைத்திருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர் பேரவைகள் சார்பாக தமிழக ராஜ்பவனுக்கு கோரிக்கை மற்றும் ஆதங்க மெயில்கள் பறந்து கொண்டிருக்கின்றன. அவை அப்படியே கவர்னர் வித்யாசாகர் ராவின் கவனத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ளன.
நெல்லை, மதுரை, கோவை, திருச்சி என்று தமிழகத்தின் முக்கிய கல்வி மையங்கள் எங்கும் இருந்தும் பல கல்லூரி மாணவர் பேரவைகள் சார்பாக வந்து விழுந்திருக்கும் மெயில்களில் அந்தந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் உள்ளிட்ட மிக முக்கிய பதவியிலுள்ள நபர்களின் ஊழல் மற்றும் முறைகேடு விஷயங்கள் ஆதாரத்துடன் அடுக்கப்பட்டுள்ளனவாம்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் கேட்பாரற்று கிடக்கும் பழைய ஊழல் விவகாரங்களை மேற்கோள் காட்டி ‘இவை கண்டுகொள்ளப்படாததன் பின்னனி என்ன?’ என்று கேட்டிருக்கிறார்களாம் மாணவர்கள்.
கோவை பாரதியார் பல்கலையில் சமீபத்தில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் அப்பட்டமாக நடந்த விதிமீறல்களால் துணைவேந்தர் கணபதி விமர்சனத்துக்கு ஆளான விஷயத்தை சுட்டிக்காட்டி ‘என்னாச்சு இந்த விவகாரம்?’ என்று கேட்டிருக்கின்றனர்.
இதே பல்கலையில் தொலைதொடர்பு கல்வி மையத்தில் நடக்கும் முறைகேடுகளையும் புள்ளிவிபர வாரியாக அடுக்கி ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
இந்த மெயில்களை பார்க்கும் கவர்னர் மாளிகை அதிகாரிகள்...’பல நாட்களாக ஒர்க் செய்து இவற்றை திரட்டி, சென்சேஷனான நாளாக பார்த்து இன்று அனுப்பியிருக்கிறார்கள்.’ என்று ஆச்சரியப்பட்டிருக்கின்றனர்.
கவர்னரும் மேற்படி முறைகேடுகள் குறித்த ஆதாரங்கள் சிலவற்றை பார்த்துவிட்டு ‘இந்த மாநிலத்துல உயர்கல்வி துறை நிர்வாகம் சில இவ்வளவு மோசமா இருக்குதா?’ என்று அதிர்ந்திருக்கிறார்.
எனவே புகார்களுக்கு உள்ளாகியிருக்கும் பல்கலைகளின் துணைவேந்தர் உள்ளிட்ட மிக முக்கிய பதவியாளர்கள் பற்றிய ஸ்கேனிங் ரிப்போர்ட் உடனடியாக எடுக்கப்பட்டு, நடவடிக்கைகள் பாயுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக மொத்தத்தில் ‘ஆபரேஷன் வி.சி. (துணைவேந்தர்கள்) ஸ்டார்ட்ஸ்’ என்கிறார்கள். இதை உடனே பண்ணுங்க கவர்னர் ஜி! உங்களுக்கு கோடி புண்ணியமா போகும்.