கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தற்போது வன்முறையாக வெடித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், மாணவியின் மரணத்திற்கு காரணமாக பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்த மாணவி ஜூலை 13 ஆம் தேதி உயிரிழந்த நிலையில் , கடந்த 5 நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மாணவியின் உறவினர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்து போரட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. உறவினர்கள் போராட்டத்தினால் சென்னை - சேலம் நெடுஞ்சாலை போர்களமாக காட்சியளிக்கிறது. உறவினர்கள், போராட்டக்காரர்கள் கல்வீசியதில் 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மாணவி பள்ளியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் நிலையில், போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் சின்னசேலம் அருகே போராட்டத்தை அடக்க காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.