
திருச்சி
திருச்சியில் உள்ள பொறியியல் கல்லூரியின் விடுதி அறையில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தில் தான் எது செய்தாலும் பெற்றோருக்கு பிடிக்காததால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதியுள்ளார்.
திருச்சியை அடுத்த சிறுகனூரில் எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு சென்னை வேளச்சேரியை சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் காமராஜ் (21) மூன்றாமாண்டு படித்து வந்தார்.
கல்லூரி விடுதி அறையில் தங்கி படித்து வந்த காமராஜ், நேற்று மாலை 4.30 மணி அளவில் தான் தங்கியிருந்த அறைக்கதவை உள்பக்கமாக பூட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவரது அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த சக மாணவர்கள் அறைக்கதவை தட்டியும் திறக்கவில்லை.
அதனால், அந்த அறையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது காமராஜ் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கிக்கொண்டு இருந்தார்.
இதனையடுத்து சக மாணவர்கள் அந்த அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று காமராஜின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
பின்னர், இதுகுறித்து சிறுகனூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து காவல் ஆய்வாளர் பாலச்சந்திரன், உதவி ஆய்வாளர்கள் செல்வராஜ், ரேணுகா மற்றும் காவலாளர்கள் அங்கு விரைந்து சென்றனர்.
பின்னர் மாணவர் காமராஜ் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காமராஜ் தூக்குப்போட்ட அறையில் இருந்த மேஜையில் அவர் எழுதிய கடிதம் இருந்தது. காவலாளர்கள் கைப்பற்றிய அந்த கடிதத்தில், தனது பெற்றோருக்கு காமராஜ் உருக்கமாக எழுதி உள்ளார்.
அதில் “அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் எது செய்தாலும் உங்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் இந்த உலகத்தில் வாழ்வது வீண் என நினைத்து இந்த முடிவை எடுத்துள்ளேன். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்“ என அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருந்தது என்று காவலாளர்கள் தெரிவித்தனர்.
கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.