
தலைமுடி தொடர்ந்து கொட்டி வருகிற கவலையில், தனக்கு திருமணம் நடக்காது என்ற விரக்தியில், மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த இளைஞர் மிதுன் (27). பெங்களூரில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மிதுனுக்கு நீண்ட நாட்களாக முடி கொட்டும் பிரச்னை இருந்ததாம். இதனால் அவர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளார். இதற்காக சிகிச்சைகள் எடுத்துக் கொண்டும் கூட, அவருக்கு முடி கொட்டுதல் பிரச்னை தீரவில்லையாம். இந்நிலையில் மிதுனின் தாயார் அவருக்கு திருமணத்துக்காக பெண் பார்த்து வந்துள்ளார். ஆனால், வழுக்கைப் பிரச்னையால் அவருக்கு எதுவும் சரியாக அமையவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், மிதுன் விடுமுறை எடுத்து கொண்டு பெங்களூரில் இருந்து மதுரைக்கு வந்துள்ளார். இரு ஞாயிற்றுக்கிழமை மிதுனின் தாயார் கோவிலுக்குச் சென்றிருந்த நேரத்தில், மிதுன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மனமுடைந்த நிலையில், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப் படுகிறது.
கோவிலில் இருந்து வீட்டுக்குத் திரும்பிய மிதுனின் தாயார், தனது மகன் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மிதுனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.