
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடந்துவரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சேலம் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி வளர்மதி, சுவாதி உள்பட 7 பேர் ரெயிலில் புதுக்கோட்டைக்கு சென்றனர். அப்போது குளித்தலை ரெயில் நிலையத்தில் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்களில் வளர்மதி, சுவாதி ஆகிய 2 பேரும் திருச்சி மகளிர் சிறையிலும், மற்ற 5 பேரும் திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். மாணவி வளர்மதி நேற்று காலை ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
நெடுவாசல் போராட்டத்தில் பங்கேற்க நாங்கள் ரெயிலில் சென்றபோது, குளித்தலை ரெயில் நிலையத்தில் எங்களிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று போலீசார் அழைத்துச் சென்றனர்.
அன்று இரவுக்கு மேல் தான் எங்களை கைது செய்திருப்பதாக கூறினார்கள். நள்ளிரவு 1 மணிக்கு மேல் என்னையும், சுவாதியையும் திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர். சிறையில் என்னிடம் சோதனை நடத்த வேண்டும் என்று கூறி உடைகளை கழற்றும்படி கூறினார்கள். அதற்கு நான் மறுத்தபோது, என்னை நிர்வாணமாக்கி சோதனையிட்டனர். தொடர்ந்து 5 முறை அவ்வாறு சோதனை நடத்தினார்கள்.
சிறையில் வழங்கப்பட்ட உணவு சரியில்லை என்று கூறியபோது, என்னை தனிமை சிறையில் அடைத்து சித்ரவதை செய்தார்கள். என் மீது பரிதாபப்பட்ட பெண் கைதிகளையும் தாக்கியுள்ளதாக கூறினார்.
மேலும், சிறையில் தமக்கு நடந்த மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு முன் சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகள் அனைவரும் வேறு இடத்துக்கு மாற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனை நடத்தியதாக வந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.