
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் அதிகாரிகள் இன்று காலை வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பயணிகளின் உடமைகள் தீவிர பரிசோதனைகளுக்குப் பின்பு அவரவர் வசம் வழங்கப்பட்டு வந்தன.
அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பயணி ஒருவர் வந்தார். இதனைத் தொடர்ந்து அவரை மடக்கிய அதிகாரிகள் உடமைகளை பரிசோதித்தனர். அப்போது முகமது ஆசிப் ஆயுப்கான் என்ற அந்த நபர் 1 கோடி 45 லட்சம் ரூபாய் மதிப்புடைய வெளிநாட்டுப் பணத்தை எவ்வித ஆவணங்களும் இன்றி எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்தப் பணத்தை கைப்பற்றிய வருமான வருவாய் புலனாய்வுத்துறையினர் முகமது ஆசிப்பிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப்பொருள், தங்கக்கட்டிகள், மற்றும் வெளிநாட்டுக் கரன்சிகள் சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வருவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.