
போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனை குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் ஊட்டியில் போக்குவரத்து தொழிலாளர்கள் பேருந்துகளை நிறுத்தி முன்கூட்டியே வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர்.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற பேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.
ஆனால் வேலை நிறுத்தப் போராட்டத்தை தவிர்க்கும் வகையில் தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
ஏற்கனவே 3 கட்டங்களாக நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்த நிலையில், தற்போது அமைச்சர் தலைமையில் இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஊட்டியில் இன்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை தொடங்குவதாக இருந்த ஊட்டியில் இந்த போராட்டத்தை ஓட்டுநர்களும், நடத்துநர்களும் இன்றே தொடங்கியுள்ளனர்.
30 க்கும் மேற்பட்ட பேருந்துகளை அவர்கள் இயக்க மறுத்து போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே ஊட்டியில் சீசனையொட்டி சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ள நிலையில் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.