பாவப்பட்ட ஜென்மங்கள் பட்டியலில் விவசாயிகள்... நாட்டின் முதுகெலும்பை உடைக்கும் மத்திய-மாநில அரசுகள்

First Published Mar 28, 2017, 3:13 PM IST
Highlights
state and central governments suffers farmers


இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம் தான். ஆனால் விவசாயிகளின் முதுகெலும்பை உடைப்பதுதான் அண்மைக் காலமாக மத்திய, மாநில அரசுகளின் மறைமுக செயல் திட்டமாக உள்ளது.

நாடு முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், வறுமை மற்றும் கடன் தொல்லை காரணமாக இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் அதில் 200 பேர் அடக்கம்.

அறிவியல் ரீதியான நதி நீர் மேலாண்மை இல்லாமை, விவசாயிகள் நலன் காக்கும் சட்டங்கள் இல்லாமை, பருவமழை பொய்த்தால், வறுமை, கடன் போன்றவையே அதற்கு காரணமாகும்.

இந்நிலையில், கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகள், டெல்லி ஜந்தர் மாந்தர் பகுதியில் கடந்த 14 நாட்களாக பல்வேறு அற  போராட்டங்களில்  ஈடுபட்டு வருகின்றனர்.

நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம்,  தமிழகத்திற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் உள்ளிட்ட  கோரிக்கைகளை முன்வைத்து  அவர்களின் போராட்டம் தொடர்கிறது. 

அவர்கள், அறவழியில் சங்கு ஊதும் போராட்டம், சடலம் போல் படுத்துப் போராட்டம், ஒப்பாரி வைக்கும் போராட்டம் என அனைத்தையும் நடத்திப் பார்த்து விட்டனர். 

இறுதியில் “மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளும்” போராட்டத்தில் இறங்கி தங்கள் உயிரையே மாய்த்துக்கொள்ள முற்பட்டனர்  

ஆனாலும்  மத்திய-மாநில அரசுகள் அதை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் அலட்சிய படுத்தியே வந்தன.

அதனால் அதிர்ந்து போன நடிகர்கள் சிலரும், தமிழகத்தில் உள்ள அரசியல் பிரமுகர்களும், டெல்லியில் விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

தமிழக விவசாயிகளால் நடத்தும் போராட்டம் என தெரிந்தும், தமிழக முதல்வரோ, வேளாண் அமைச்சரோ இதுவரை அவர்களை சந்தித்து ஆதரவோ, ஆறுதலோ கூறவில்லை என்பதுதான் வேதனை.

இந்நிலையில், தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று தொடர்ந்த, விவசாயிகள் தொடர்பான  பொது நல வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், மத்திய மாநில அரசுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

மேலும், விவசாயிகள் தற்கொலையை தடுத்து நிறுத்த அரசு என்னென்ன செயல் திட்டங்களை வகுத்துள்ளது என்று 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, தாமதமாக விழித்துக்கொண்ட தமிழக அரசு, மத்திய அமைச்சர்களை விவசாயிகள் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு டெல்லி புறப்படுகிறார்.

இதுநாள் வரை, விவசாயிகள் பிரச்சினையை காது கொடுத்த கூட கேட்காத முதல்வர் எடப்பாடி, ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வெற்றிக்கு வியூகம் வகுப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தார்.

நேற்று உச்சநீதி மன்றம், மத்திய-மாநில அரசுகளுக்கு கூட்டு வைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை பாவப்பட்ட ஜென்மங்களாக இதுவரை இருப்பது விவசாயிகளும், தொழிலாளர்களும்தான்.

ஒரு நாயை  அடித்தாலும்  ஆதரவு தர  விலங்குகள்  நல வாரியம், வரிந்து கட்டி கொண்டு நீதி மன்றத்திற்கு வந்து விடுகிறது. 

மருத்துவர்கள்,நடிகர்கள் என யாருக்கு எந்த பாதிப்பு வந்தாலும், அந்தந்த அமைப்புகள் அவர்களுக்காக ஆதரவுக்கு கரம் நீட்டுகின்றன. 

ஆனால் நாட்டுக்கே சோறு போடும், விவசாயிகள் வறுமையிலும், கடனிலும் தற்கொலை செய்து கொண்டால் மட்டும், யாரும் திரும்பிப் பார்ப்பது இல்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.

இவ்வாறு நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தையும், விவசாயிகளையும் புறக்கணித்துவிட்டு, இந்தியா எப்படி வல்லரசாகும்?

click me!