
மருத்துவ படிப்பில் 85% இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்திருப்பது மாணவர்களுக்கு தமிழக அரசு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் ஆணை செல்லுபடியாகும் என்பதற்கு உத்தரவாதம் உண்டா? என சட்டசபையில் தான் கேள்வி எழுப்பியிருந்ததை சுட்டிக்காட்டினார்.
ஆனால் தமிழக அரசு வழங்கியிருக்கும் அரசாணை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தடை போட்டிருக்கிறதே , இப்போது அரசு என்ன செய்யப் போகிறது என கேள்வி எழுப்பினார்.
மருத்துவ கலந்தாய்வு ஏற்கனவே காலதாமதம் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இந்த ஆண்டு கலந்தாய்வு நடைபெறுமா என்ற குழப்பத்தில் மாணவர்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள் என குறிப்பிட்ட ஸ்டாலின், தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை இந்த அரசு காவு வாங்கியிருக்கிறது என குற்றம்சாட்டினார்.
அதுமட்டுமல்லாமல், நம்முடைய மாணவர்களுக்கு ஒரு மன்னிக்க முடியாத துரோகத்தை இந்த குதிரைபேர ஆட்சி செய்திருக்கிறது என்பதுதான் இன்றைய நிலைமை என வேதனையுடன் குறிப்பிட்டார்..