
தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள் குறித்து விளக்கும் வகையில் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்னும் நிகழ்ச்சி சென்னை நேரு விளையாட்டு உள்ளரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கல்வியில் சிறந்த தமிழ்நாடு, கல்வியில் வளர்ந்த தமிழ்நாடாக மாறும் என்று உறுதி அளித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ''இங்கு மாணவர்களின் பேச்சை கேட்க கேட்க நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன்.
ஏனெனில் உங்களின் கருத்துகளை கேட்கும் நமது உழைப்புக்கான பலன் நமது கண்முன்பே தெரியும் என நான் இங்கே உணர்ந்து இருக்கிறேன். எனக்கு முன்பு பேசிய அனைவரும் தமிழ்நாடு கல்விக்காக என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்துள்ளது? என்பது குறித்து பேசினார்கள். எங்களை பாராட்டிக் கொள்வதற்காக இந்த நிகழ்ச்சியை நடத்தவில்லை. உங்களை கொண்டாடுவதை பார்த்து அடுத்த பேட்ச் மாணவர்களுக்கு இன்னும் படிப்பு மேல் ஆர்வம் வர வேண்டும். அது தான் முக்கியம்'' என்றார்.
மேலும் பேசிய ஸ்டாலின், ''தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நமது மகளிர் விடியல் பயண திட்டத்தை தங்கள் மாநிலத்தில் செயல்படுத்தி வருகிறார். நாமும் அவர்களின் நல்ல திட்டங்களை செயல்படுத்த தயாராக உள்ளோம். மாணவர்களே நீங்கள் படித்தால் நீங்கள் மட்டுமல்ல; உங்களுடைய குடும்பமும், உங்களுடைய அடுத்த தலைமுறையும் முன்னேறும். குடும்பங்கள் முன்னேறினால் மாநிலங்கள் முன்னேறும். மாநிலங்கள் முன்னேறினால் நாடு முன்னேறும்.
சாதி என்னும் கால் முளைத்த சதி
இதனால் தான் நாம் நாம் தொடர்ந்து கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து வருகிறோம். ஆயிரம் ஆண்டுகளாக சாதி என்னும் கால் முளைத்த சதி ஆக்கிரமித்ததால் நமது கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது. வரலாறு நெடுக இந்த ஆதிக்கத்துக்கு எதிராக கலகம் செய்த புரட்சியாளர்கள் இருந்து கொண்டே உள்ளனர். திராவிய இயக்கம் நடத்திய புரட்சியால் தான் தமிழகம் இந்த அளவுக்கு வேகமாக நடைபோடுகிறது. மதிய உணவு திட்டத்தை நீதிக்கட்சி அறிமுகம் செய்தது. பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை தமிழகம் விரிவுப்படுத்தினார்.
மாணவர்களின் வருகை அதிகரிப்பு
அதுதான் படிப்படியாக வளர்ந்து காலை உணவுத் திட்டமாக உருவாகியிருக்கிறது. திராவிட மாடல் அரசு 4 ஆண்டுகளாக புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். ஒரு வேளை உணவு கொடுப்பதாலேயே, மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாலேயே என்ன மாற்றம் வந்து விட்டதென சிலர் நினைக்கலாம். காலை உணவுத் திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது.
என்னுடைய இலக்கு அனைவருக்கும் கல்வி
புதுமைப்பெண் திட்டத்தால் பிளஸ் 2 படித்த மாணவர்களின் 75% பேர் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். பெண்கள் அதிக அளவில் உயர் கல்வியில் சேர்ந்துள்ளனர். கல்வியில் தமிழ்நாடு பெற்ற எழுச்சியை மற்ற மாநிலங்கள் திரும்பி பார்க்கின்றன. இந்த எழுச்சியை பொறுக்க முடியாமல் தான் கல்விக்கு தடை ஏற்படுத்த வேண்டும் என ஒன்றியத்தில் நினைக்கிறார்கள்.
நம்முடைய வளர்ச்சியை பார்த்து ஒதுக்க முடியாமல் தடை ஏற்படுத்தக்கூடிய சிலருக்கு பயத்தை வரவழைக்க வேண்டும். நிச்சயம் நம்முடைய திட்டங்களாலும் உங்களுடைய சாதனைகளாலும் அது நடக்கும். என்னுடைய இலக்கு அனைவருக்கும் கல்வி. அனைவருக்கும் உயர்தர கல்வி'' என்று தெரிவித்தார்.