
தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் விவசாயிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிர்ச்சியடைய வைக்கிறது.
காவேரி டெல்டா பகுதிகளில் நெற்பயிர் வாடுவதைப் பார்த்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால் கொங்குமண்டலத்தில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் பயிர் கருகுவதைப் பார்த்து விவசாயிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் என்பது வேதனை தரும் செய்தியாக இருக்கிறது.
பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்குட்பட்ட 24,500 ஏக்கருக்கும், காலிங்கராயன் கால்வாய் பாசனத்திற்குட்பட்ட 15,400 ஏக்கருக்கும், கீழ் பவானி பாசனத்திற்குட்பட்ட இரண்டு லட்சத்து 7000 ஏக்கருக்கும் நீர் வழங்கப்பட்டு வருகிறது. மஞ்சள் விவசாயத்திற்கு இதுதான் ஆதாரம் என்பதால் இந்த தண்ணீரை நம்பியே இப்பகுதி விவசாயிகள் இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் கடந்த ஆகஸ்ட் 12-ந்தேதி காலிங்கராயன் கால்வாயிலிருந்து தண்ணீர் திறந்து விட்ட அ.தி.மு.க. அரசு, செப்டம்பர் 9-ந்தேதியன்றே நிறுத்தி விட்டது.
இது தொடர்பாக ஈரோடு மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்ற இரு பேச்சுவார்த்தைகளில் “தண்ணீர் திறந்து விடப்படும்” என்று வாக்குறுதி கொடுத்தும் இதுவரை மஞ்சள் விவசாயத்தைக் காப்பாற்ற காலிங்கராயன் கால்வாயில் தண்ணீர் திறந்து விடவில்லை.
தொடர்ந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாலும், மஞ்சள் பயிர்கள் எல்லாம் வாடி, வதங்கி, கருகிப் போவதாலும் விவசாயிகள் மனமுடைந்து போயிருக்கிறார்கள்.
ஆகவே காலிங்கராயன் கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறந்து விட்டு, மஞ்சள் விவசாயத்தை காப்பாற்றுமாறும், ஈரோடு மாவட்டத்தில் இதனால் ஏற்படும் விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அ.தி.மு.க. அரசை கேட்டுக் கொள்வதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.