ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கனும்.! உடனடியாக 2ஆயிரம் கோடியை கொடுங்க- மோடிக்கு ஸ்டாலின் அவரச கடிதம்

Published : Feb 20, 2025, 12:08 PM ISTUpdated : Feb 20, 2025, 12:11 PM IST
ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கனும்.! உடனடியாக 2ஆயிரம் கோடியை கொடுங்க- மோடிக்கு  ஸ்டாலின் அவரச கடிதம்

சுருக்கம்

மும்மொழி கொள்கை அமல்படுத்தாததால் நிதி விடுவிக்கப்படவில்லை. உடனடியாக நிதியை விடுவிக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மும்மொழி கொள்கை- மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தாததால் தமிழகத்திற்கு மத்திய அரசு நிதியை விடுவிக்கவில்லை, இதனால் இலட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதியும், தமிழ்நாட்டிற்கு 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின்கீழ் வரவேண்டிய நிதியினை உடனடியாக விடுவித்திட  கோரி  பிரதமர் நரேந்திர மோடிக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  அக்கடிதத்தில், "தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ முழுமையாக அமல்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை, தமிழ்நாட்டிற்கான 'சமக்ர சிக்ஷா' (Samagra Shiksha) திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்பட மாட்டாது" என்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சர்  சமீபத்தில் தெரிவித்திருப்பது குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள  தமிழ்நாடு முதலமைச்சர்,

தமிழகத்திற்கு விலக்கு

இது தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெருத்த கவலையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் கல்வி மற்றும் சமூகச் சூழலில், இருமொழிக் கொள்கையானது நீண்ட காலமாக ஆழமாக வேரூன்றியுள்ளதாகவும், அதனைப் பின்பற்றுவதில் தமிழ்நாடு எப்பொழுதும் உறுதியாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அலுவல் மொழிகள் விதி, 1976-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, "அலுவல் மொழிச் சட்டம், 1963"-ஐச் செயல்படுத்துவதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

 

தமிழக மக்களுக்கு பயன் அளிக்காது

இரு மொழிக் கொள்கை மற்றும் சமூக நீதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட முற்போக்குக் கொள்கைகளின் காரணமாக,கடந்த அரை நூற்றாண்டில் தமிழ்நாடு அடைந்துள்ள மகத்தான முன்னேற்றங்கள் மற்றும் அதற்கு வித்திடும் முன்முயற்சிகளைக் காண முடிகிறது எனவும், எங்கள் இருமொழிக் கொள்கையில் எந்தவொரு மாற்றமும் கொண்டுவர உத்தேசிப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பெரிய அளவில் பயனளிக்காது என்பதை மேலே உள்ளவை தெளிவாக எடுத்துக்காட்டுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஒன்றிய அரசின் இரண்டு வெவ்வேறு திட்டங்களான "சமக்ர சிக்ஷா" திட்டத்தையும், தேசிய கல்விக் கொள்கையைப் பிரதிபலிக்கும் பி.எம்.ஸ்ரீ. (PM SHRI) திட்டத்தையும் ஒன்றாகப் பொருத்திப் பார்ப்பது என்பது அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்பதைத் தான் மீண்டும் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள  முதலமைச்சர் அவர்கள், தற்போது ஒரு மாநிலத்தில், அங்குள்ள காலச் சூழலுக்கேற்ப பின்பற்றப்பட்டு வரும் கொள்கைகளுக்கு எதிராக. அந்த மாநிலத்தைக் கட்டாயப்படுத்துவதற்கு, நிதி வழங்கும் விவகாரங்களில் ஒன்றிய அரசு அழுத்தம் தரும் இத்தகைய முயற்சி, கூட்டாட்சித் தத்துவத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும் என்று தெரிவித்துள்ளதோடு, 

ஆசிரியர்களுக்கு ஊதியம்

குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் தங்களது கல்விக் கொள்கைகளை வடிவமைக்கும் மாநிலங்களின் உரிமைகளை பெருமளவில் பாதிக்கும் என்றும் கவலையோடு சுட்டிக்காட்டியுள்ளார்.தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்படாததால், ஆசிரியர்கள் சம்பளம், மாணவர்களுக்கான நலத் திட்டங்களை உள்ளடக்கிய கல்வி முன்னெடுப்பு முயற்சிகள், கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பயிலும் வறிய நிலையில் வாழும் மாணவர்களுக்கான கல்வித் தொகையைச் திருப்பிச் செலுத்துதல் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கான போக்குவரத்து போன்றவற்றிற்கான பல முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்,கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், இலட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, இந்த விஷயத்தில் பிரதமர் அவர்கள் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

நிதியை உடனடியாக விடுவிக்கனும்

இந்தத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்கப்படாமல் உள்ளதால் ஏற்பட்டுள்ள வருந்தத்தக்க சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ செயல்படுத்துவதோடு 'சமக்ர சிக்ஷா' திட்டத்தைப் பொருத்திப் பார்க்காமல், 2024-25 ஆம் நிதியாண்டில் இந்தத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ.2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க பிரதமர் நரேந்திர மோடி இப்பொருண்மையின் தீவிரத்தை உணர்ந்து, தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்றுதமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!
மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! அலறி துடித்த பயணிகளின் நிலை என்ன?