பிள்ளைகளுக்கு பைக் வாங்கி தருவதில் கவனம் தேவை… பெற்றோர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!!

By Narendran SFirst Published Dec 18, 2021, 4:42 PM IST
Highlights

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வாகனம் வாங்கி தருவதில் கவனமாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வாகனம் வாங்கி தருவதில் கவனமாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்திட, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான நம்மைக் காக்கும் 48 திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இவ்விழாவில், ஈரோடு, IRT பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம், ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை, வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்சி, காவேரி மெடிக்கல் சென்டர், கரூர், அமராவதி மருத்துவமனை, திருநெல்வேலி கேலக்ஸி மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகள் காணொலிக் காட்சி வாயிலாக "இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48" திட்டத்தில் இணைக்கப்பட்டன. 609 மருத்துவமனைகளில் தொடங்குவதன் அடையாளமாக, 18 மருத்துவமனைகளின் பிரதிநிதிகளிடம் அதற்கான கடவுச் சொற்களை வழங்கி, இன்னுயிர் காப்போம் திட்டத்தின் காணொலி குறுந்தகட்டினையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

பின்னர் பேசிய அவர், விபத்துகளை பொறுத்தவரை இந்திய அளவில் அதிக உயிரிழப்பு ஏற்படும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது வருத்தத்தை தருகிறது.  நாட்டுக்கே பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள முதல்வர்களில் நான் முதலிடம் என்பதைவிட தமிழகம்தான் மற்ற மாநிலங்களைவிட முன்னணியாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். சாலை விதிகளை கடைப்பிடிப்பதில் தான் சமூக பண்பாடு தனிமனித ஒழுக்கம் இருக்கிறது. தனிநபரின் உயர் நாட்டுக்கு மிக முக்கியம். சாலை பாதுகாப்பை மேம்படுத்த தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. தனிநபரின் உயிர் நாட்டுக்கு மிக முக்கியம் என்பதை நாம் உணர வேண்டும். சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  விபத்துக்கு முக்கிய காரணம் சாலைகளில் வேகமாக செல்வது, எனவே சாலை விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இளைஞர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டும்; கார்களில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக, முதலமைச்சர் இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் – 48 திட்டம் குறித்த கண்காட்சி அரங்கினைத் திறந்து வைத்து பார்வையிட்டார். தமிழ்நாடு அரசு சாலை பாதுகாப்பு, சாலை விபத்துக்களை குறைத்தல், சாலை விபத்தில் உயிரிழப்புகளை தடுத்தல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில், சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைத்திடும் நோக்கில் தமிழ்நாடு அரசால் வகுக்கப்பட்ட உன்னத திட்டமே இன்னுயிர் காப்போம் திட்டம். இத்திட்டத்தின் முக்கிய அங்கமாக, சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் வகையில் இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48 திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கென அங்கீகரிக்கப்பட்ட 201 அரசு மருத்துவமனைகள் மற்றும் 408 தனியார் மருத்துவமனைகள், என மொத்தம் 609 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு, மருத்துவச் சிகிச்சைகள் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரம் மிக முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவச் சிகிச்சை முறைகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை செலவினத்தில் (ceiling limit) சிகிச்சை மேற்கொள்ளப்படும். இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டத்தை தொடங்கிவைத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஆதிபராசக்தி அறக்கட்டளை மருத்துவமனைக்குச் சென்று, அங்கு இத்திட்டத்திற்கான அவசர சிகிச்சைப் பிரிவினை திறந்துவைத்தார். பின்னர் அம்மருத்துவமனையில், சாலை விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ரங்கநாதன் என்பவரைச் சந்தித்து, உடல்நலம் குறித்து விசாரித்து அறிந்தார். காயமடைந்த ரங்கநாதனுக்கு, இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் சிகிச்சை அளித்திட மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.

click me!