
இன்று தொடங்குகிறது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு… 10 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன. இந்தத் தேர்வுகளை 10 லட்சத்து 38 ஆயிரத்து 022 மாணவ – மாணவிகள் எழுதுகின்றனர். இத்தேர்வுகள் இன்று தொடங்கி வரும் 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12,187 பள்ளிகளிலிருந்து மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 022 மாணவர்கள் எழுதுகின்றனர்.
இதில் மாணவர்கள் 4 லட்சத்து 98 ஆயிரத்து 406 பேர், மாணவிகள் 4 லட்சத்து 95 ஆயிரத்து 792 பேர் ஆவர். இவர்களை தவிர 43 ஆயிரத்து 824 தனித்தேர்வர்களும் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர்.
தமிழில் தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 19 ஆயிரத்து 721 ஆகும். பொதுத் தேர்வை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3,371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களைக் கண்காணிக்க 6,403 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாவட்டத்தில் 571 பள்ளிகளை சேர்ந்த 51 ஆயிரத்து 664 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதில் 25,280 பேர் மாணவர்கள், 26,384 பேர் மாணவிகள்.இதற்காக 209 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பாளையங்கோட்டை, திருச்சி, கோவை, புழல், வேலூர் ஆகிய இடங்களில் உள்ள சிறைகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் ஆண்கள் 219 பேர், பெண்கள் 10 பேர் என மொத்தம் 229 சிறைவாசிகள் தேர்வெழுதுகின்றனர்.
பொதுத் தேர்வு எழுதும் 10 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாத தேர்வுத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் தேர்வர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்து கொண்டுவரும் திட-திரவ நிலை உணவு வகைகளை பிறர் உதவியின்றியும் பிற மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் உட்கொள்ளலாம் எனவும் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.