Sri Rangam : 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மகா வைகுண்ட ஏகாதசி…ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு

By Raghupati RFirst Published Dec 14, 2021, 7:48 AM IST
Highlights

19 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மகா வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு, புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் இன்று திறப்பு. 

பூலோக வைகுண்டம் என்று சிறப்பித்து சொல்லப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது. இதில் மார்கழி மாதம் 20 நாட்கள் திருவத்யயன உற்சவம் என்ற வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா நடக்கும். இந்த விழா நாலாயிர திவ்வியப்பிரபந்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பகல் பத்து, இராப்பத்து என்று இரண்டு பகுதிகளாக நடத்தப்படுகிறது. பகல் பத்து நாட்களில் பெருமாள் முன் அரையர்கள் தீந்தமிழ் திருமொழிப் பாசுரங்களைப் அபிநயத்தோது பாடுவார்கள். இராபத்து துவக்க நாளின் அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக உற்சவர் ஆயிரங்கால் மண்டபம் வருவார். 

முக்கிய நிகழ்ச்சியான இன்று பரமபத வாசல் திறப்பு அதிகாலை நடைபெற்றது. உற்சவர் ஸ்ரீ நம் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து சிம்மகதியில் புறப்பட்டு, காலை 4.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது. அதன் வழியே அடியார் திருக்கூட்டம் புடை சூழ பரமபத வாசலை கடந்து நம்பெருமாள் ரத்தின அங்கி பாண்டியன் கொண்டை கிளி மாலை உள்ளிட்ட ஆபரணங்கள் தரித்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

ஸ்ரீரங்கத்தில் இவ்வருடம் தை பிரம்மோற்சவம் நடைபெறும் என்பதால் சொர்க்க வாசல் திறப்பு முன்கூட்டியே கார்த்திகை மாதத்தில் நடைபெறுகிறது. 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்வாறு நடைபெறுவது வழக்கமாகும். கொரோனா கட்டுப்பாடு: கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சொர்க்க வாசல் திறப்பு அன்று, ரெங்கா ரெங்கா கோபுரம் வழியாக காலை 7:00 முதல் இரவு 9:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இன்று, திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளால் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் சொர்க்கவாசல் திறப்புக்கு பின்னர் பக்தர்களை தனிமனித இடைவெளியுடன் அனுமதிக்க உள்ளனர். அவர்கள் சென்று வருவதற்கு ஏதுவாக ஸ்ரீரங்கம் கோயில் நுழைவாயிலில் இருந்து தடுப்புகள் அமைக்கப்பட்டு அதன் மூலமே சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வைகுண்ட ஏகாதேசி திருவிழாவிற்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் வளாகத்தின் உட்புறப் பகுதியில் 117 சிசிடிவி கேமராக்களும் கோயில் வெளிப்புறப் பகுதியில் 90 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

click me!