இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் தங்க முடியாது! செக் வைத்த மத்திய அரசு! பொங்கியெழுந்த அன்புமணி!

Published : Sep 08, 2025, 02:40 PM IST
Anbumani Ramadoss

சுருக்கம்

இலங்கை தமிழர்கள் நீண்ட கால விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியாது என மத்திய அரசு கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நமது அண்டை நாடான இலங்கையில் இருந்து பிழைப்பு தேடி இலங்கை தமிழர்கள் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வருகை புரிகின்றனர். உள்நாட்டுப் போரின் போது ஏராளமான மக்கள் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர். இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோதும் ஏராளமான மக்கள் பிழைக்க வழியின்றி தமிழ்நாட்டு பக்கம் ஒதுங்கினார்கள். இந்நிலையில், இலங்கை தமிழர்கள் நீண்ட கால விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. அவர்கள் 1955 குடியுரிமைச் சட்டத்தின் கீழ் அவர்கள் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஈழத்தமிழர் நலன்களுக்கு எதிரானது

இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையில் போர் முடிந்த பிறகும் கூட 2015-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி வரை இந்தியாவுக்கு வந்த இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் போதிலும் கூட, அதைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் நீண்ட கால விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு முட்டுக்கட்டை போடும் மத்திய அரசின் இந்த நிலைப்பாடு ஈழத்தமிழர் நலன்களுக்கு எதிரானது ஆகும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் கண்டனம்

இலங்கையில் போர் தொடங்கிய பிறகு 1983-ஆம் ஆண்டு ஜூலை மாதத்திர்கு பிறகு இந்தியாவுக்கு வந்த இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கக்கூடாது என்று 1986-ஆம் ஆண்டு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியதாகவும், அது இப்போதும் தொடர்வதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீண்ட கால விசாக்கள் எனப்படுபவை ஓராண்டு முதல் ஐந்தாண்டுகளுக்கு வழங்கப்படும். அவற்றை புதுப்பித்துக் கொள்ள முடியும். நீண்ட கால விசாவைப் பயன்படுத்தி இந்தியாவில் ஒருவர் 11 ஆண்டுகள் தொடர்ந்து தங்கியிருந்தால், அதைக் காட்டி அவர்கள் இந்தியாவில் நிரந்தரக் குடியுரிமை பெற முடியும்.

இந்தியக் குடியுரிமை கிடைக்க வாய்ப்பில்லை

ஆனால், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நீண்ட கால விசாக்கள் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலை உருவாகியுள்ளது என்று அன்புமணி கூறியுள்ளார்.

மேலும் நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 2025-ஆம் ஆண்டின் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் சட்டத்தின்படி கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி வெளியுறவுத்துறை பிறப்பித்த அறிவிக்கையின்படி, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த சிறுபான்மை சமூகங்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள் ; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் சலுகை மறுப்பது ஏன்?

அந்தப் பட்டியலில் உள்ள பிற நாட்டவர்களுக்கு நீண்ட கால விசாவும், அதன்பின் குடியுரிமையும் வழங்கப்படும் எனும் நிலையில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு மட்டும் அந்த சலுகையை மறுப்பது நியாயமல்ல. தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்த ஈழத் தமிழர்கள் மீண்டும் அங்கு சென்று வாழ்வதற்கான வாய்ப்புகல் மிகவும் குறைவு. அவர்கள் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கண்ணியமாக வாழ வகை செய்யப்பட வேண்டும். அதற்கு வசதியாக இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு முதல் கட்டமாக நீண்டகால விசாவும், பின்னர் குடியுரிமையும் வழங்கும் வகையில் உரிய சட்டத் திருத்தங்களை மத்திய அரசு செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வட மாவட்டத்துக்கு ரெஸ்ட்! தென் மாவட்டம் பக்கம் திரும்பும் மழை! எச்சரிக்கை ரிப்போர்ட்!
அமைதியும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பாஜக ஏன் பயப்படுகிறது? அமைச்சர் கேள்வி