
பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தையொட்டி, இலங்கை அரசு ஞாயிற்றுக்கிழமை 14 தமிழக மீனவர்களை விடுவித்தது. இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நல்லெண்ண முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியும் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவும் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இந்தியாவின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை கூட்டாகத் தொடங்கிவைத்தார்கள். மஹோ-அனுராதாபுரம் பாதைக்கான நவீனமயமாக்கப்பட்ட ரயில்வே சிக்னல் அமைப்பு, மஹோ-ஓமந்தை பாதையின் ரயில் பாதை உள்ளிட்ட திட்டங்களை இருவரும் தொடங்கி வைத்தனர்.
முன்னதாக, இரு தலைவர்களும் அனுராதாபுரத்தில் உள்ள புனித ஜெய ஸ்ரீ மகா போதி கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தனர். இந்தப் பயணம் குறித்து பிரதமர் மோடி, "அனுராதாபுரத்தில் எனது நண்பரும் இலங்கை அதிபருமான அனுர குமார திசாநாயக்கவுடன்," என எக்ஸில் பதிவிட்டார்.
பிரதமர் மோடி இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்தார், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் கொழும்பில் உள்ள பல்வேறு தரப்பினரின் ஆதரவைச் சுட்டிக்காட்டினார். தற்போதைய அரசாங்கம் மட்டுமின்றி, இலங்கையின் முழு அரசியல் சூழலும் இந்தியாவுடன் இணைக்கமான தொடர்பு கொண்டிருப்பதாகவும் கூறினார்.
2019ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். பாங்காக்கில் நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிறகு இலங்கை சென்றுள்ளார்.
இந்தப் பயணத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக, இலங்கை தனது மிக உயர்ந்த சிவில் விருதான மித்ர விபூஷண விருதை பிரதமர் மோடிக்கு வழங்கியது. இருதரப்பு உறவுகளில் இது ஒரு மைல்கல் என்று வர்ணித்த இலங்கையின் துணை வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமசந்திரா, குறிப்பாக பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளின்போது இந்தியாவின் உறுதியான ஆதரவை அங்கீகரித்து இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது என்றார்.