
நீட் தொடர்பான சட்ட விவகாரத்தில் எந்த சிக்கலும் இல்லை, விரைவில் ஒப்புதல் பெறுவோம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மருத்துவம், தொழில் கல்விற்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் தேர்வு எனப்படும் நுழைவுத்தேர்வை மத்திய அரசு நடத்துகிறது.
தமிழகத்தில் அதிக அளவு மருத்துவ கல்விக்கான இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவது சிரமம் என்பதால் இந்த தேர்வு எழுதுவதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.
இதற்கான சட்டமும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த சட்டத்திற்கு மத்திய அரசு மற்றும் ஜனாதிபதியின் ஒப்பதல் கிடைக்கவில்லை.
இதையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சென்னை வந்த போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.
அப்போது நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், மற்றும் துறை செயலாளர்கள் ஆகியோர் டெல்லி சென்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின்போது நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதன்பின்பு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜெ.பி. நட்டாவையும் தமிழக அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் நீட் தொடர்பான சட்ட விவகாரத்தில் எந்த சிக்கலும் இல்லை, விரைவில் ஒப்புதல் பெறுவோம் என தெரிவித்தார்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிப்பது குறித்த கோரிக்கையை பரிசலீப்பதாக நட்டா தெரிவித்தார்.
நீட் தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்கள் பாதிக்கபடுவார்கள் என எடுத்து கூறினோம்.
மாணவர்கள் சேர்க்கை தேதி நெருங்கி வருவதால் விரைவில் நடவடிக்கை எடுக்க கோரினோம்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்தவமனை விரைவில் அமைக்கப்படும் என நட்டா உறுதி அளித்தார்.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.