Savukku Shankar : தனிப்படை நடத்திய சோதனையில் சவுக்கு சங்கர் அலுவலகத்தில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்த பதிவில் காணலாம்.
பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சிலர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரவாயில் பகுதியில் உள்ள அவரது வீட்டிலும், தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்திலும் தேனி மாவட்ட தனிப்படை போலீசார் இன்று சோதனை மேற்கொண்டனர். சவுக்கு சங்கர் தனது காரில் கஞ்சா வைத்திருப்பதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் தான் தேனி மாவட்ட தனிப்படை போலீசார் இந்த சோதனையை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தேனி மாவட்ட தனிப்படை போலீசார் நடத்திய இந்த அதிரடி சோதனையில், சவுக்கு சங்கரின் தி நகர் அலுவலகத்தில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தற்பொழுது தகவல்கள் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சவுக்கு சங்கரின் அலுவலகம் மற்றும் இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒரே பெயரில் உள்ள மின் இணைப்புகள் இணைப்பு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சென்னையை சேர்ந்த சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த மே 4ம் தேதி கைது செய்தனர். அதன்பிறகு அவர்கள் பயணித்த வாகனம் ஒரு சிறிய விபத்துக்குள்ளான நிலையில் சவுக்கு சங்கர் உள்ளிட்ட அந்த வாகனத்தில் பயணித்த சிலருக்கு காயங்கள் ஏற்பட்டது.
அதன் பிறகு கோவை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரை ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இது மட்டுமில்லாமல் சேலம், திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் தேனியில் அவரது காரில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகவும் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆறு பேர் கொண்ட குழுவாக தேனி தனிப்படை போலீசார் திநகரில் உள்ள சவுக்கு சங்கரின் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்திய போது சவுக்கு சங்கர் அலுவலகத்திலும் அவரது நண்பர் ராஜரத்தினம் வீட்டிலும் ஒன்றேகால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அவரது இல்லத்திற்கும் அலுவலகத்திற்கும் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.