
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரி 12 ஆண்டுகளுக்குப் பின் வறண்டுள்ளதால் சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ளது சோழவரம் ஏரி. விவசாயத்திற்கு மட்டுமின்றி பெருநகர மக்களின் தாகத்தை தணிய வைக்கும் இந்த ஏரி மணல் கொள்ளையின் காரணமாக தனது நீரினை இழந்து முற்றாக வறண்டு போயுள்ளது. 881 மில்லியன் கன அடி கொண்ட இந்த ஏரியில் தற்போது 6 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
இதன் காரணமாக சோழவரம் ஏரியில் இருந்து ராட்சத மின்மோட்டார்கள் மூலம் புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
அதிகப்படியான மணல் அள்ளியதால் ஏரியில் ஆங்காங்கே கிணறு போன்ற ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் தேங்கியிருக்கும் தண்ணீரையாவது பயன்படுத்த முடியுமா என்ற ஆலோசனையில் குடிநீர் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தப்பித்தவறி மழைபெய்தாலும் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் வந்தாலும் சோழவரம் ஏரியில் இருக்கும் பள்ளத்தில் தான் தண்ணீர் தேங்கும் என்கின்றனர் விசயமறிந்தவர்கள். இதனால் ஏரி அதன் கால் கொள்ளவைக் கூட எட்ட முடியாதது என்று எச்சரிக்கை விடுக்கின்றனர் சோழவரம் ஏரி பராமரிப்பாளர்கள்.
12 ஆண்டுகளுக்குப் பின்பு சோழவரம் ஏரி வறண்டு போயிருப்பது சென்னையில் பெரும் தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்தும் என்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.