
புவிவெப்பமயமாதல் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து, 2100ம் ஆண்டில், தென் சென்னையின் வேளச்சேரி, பெருங்குடி, டி.சி.எஸ்., டெக் மகிந்திரா, விப்ரோ, எச்.சி.எல். கட்டிடம் ஆகியவை கடலுக்குள் செல்லும் என்று இஸ்ரோ நிறுவனத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் ஒரு அங்கமான, அகமதாபாத்தில் இயங்கும் சாட்டிலைட் அப்ளிகேஷன் மையம் ‘ இந்திய கடல்பகுதிகள்’ என்ற தலைப்பில் தயாரித்திருக்கும் அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3,209 சதுர கி.மீ.
இந்த அமைப்பு, தமிழக அரசுக்கு அனுப்பிய எச்சரிக்கைச் செய்தியில், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் 3,209.33 சதுர கி.மீ. தூரம் கடலுக்குள் மூழ்கும். அதுவும் 2100ம் ஆண்டு கடல் நீர் மட்டம் ஒரு மீட்டர் அளவுக்கு உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள வரைபடத்தில் நீலநிறத்தில் இருக்கும் பகுதிகள் நீரில் முழ்கும் என்றும், சிவப்பு அடையாளமிட்ட பகுதிகளில் கடல் அலை ஒருமீட்டர் உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2100ம் ஆண்டு
2100ம் ஆண்டில் கடல் நீர்மட்டம் ஒரு மீட்டர் அளவுக்கு உயர்வதால், 231 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட மாநில நெடுஞ்சாலை, 85 கிலோ மீட்டர் ரயில்வே கட்டமைப்புகள், 497 சதுர கிலோ மீட்டர் விவசாய நிலங்கள், 826 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நீர் நிலைகள் கடலுக்கு அடியில் செல்லும் ஆபத்து உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாக்க வேண்டும்
கடல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த பூஜா குமார் இது குறித்து கூறுகையில், “ பருவநிலைமாற்றம், கடல்மட்டம் உயர்வு தற்போதுள்ள மிகப்பெரிய ஆபத்துகளாகும். கடல் அரிப்பு, கடல்மட்டம் உயர்தல் ஆகியவற்றில் இருந்து காக்க, இயற்கையாக அமைந்த தடுப்பு அரண்களை நாம் பாதுகாக்க வேண்டும்.
சென்னை பகுதிகள்
சென்னை எண்ணூர் பகுதியில் 3.11 சதுர கி.மீ பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உல்லது. எ.டி.இ.சி.எல். வல்லூர், எண்ணூர் டேன்ஜெட்கோ மின்நிலையம், துறைமுகம், எச்.பி.சி.எல்., பி.பி.சி.எல்., மீஞ்சூர் நீர் சுத்திகரிப்பு நிலையம், மணலி பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை நீருக்குள் செல்லும்.
தென் சென்னையின் வேளச்சேரி, பெருங்குடி, டி.சி.எஸ்., டெக் மகிந்திரா, விப்ரோ, எச்.சி.எல். கட்டிடம் ஆகியவை கடலுக்குள் செல்லும்
கொசஸ்தலையாறு, அரனியாறு ஆகியபகுதிகளும் கடல் அலை மட்டம் உயர்வால் பாதிக்கப்படும். கொடுங்கையூர், பெருங்குடி குப்பைகொட்டும்பகுதி ஆகியவையும் பாதிக்கப்படும்.
ஆபத்து
மேலும், கடலூர், நாகப்பட்டினம் பகுதியில் உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள், தூத்துக்குடி உப்பளம், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவை மிகவும் ஆபத்தான பகுதிகளில் அமைந்துள்ளன. இவை கடல் அலைகளால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இவை அனைத்தும் உடனடியாக ஏற்படாது, 2100ம் ஆண்டு நடக்கும். அதற்கு முன், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நடக்கத் தொடங்கும். நாம் அமைதியாக இருக்காமல் , அடுத்த தலைமுறையினருக்கு பாதுகாப்பாக இவற்றை ஒப்படைக்க வேண்டும் ’’ என்று தெரிவித்தார்.
10 லட்சம் பேர்
ஊரக திட்டவியலாளர் ஏ. ஸ்ரீவத்சன் இது குறித்துக் கூறுகையில், 'பியூச்சர் சீ லெவல் ரைஸ் : அஸெஸ்மென்ட் டியூ டு எஸ்எல்ஆர் பை 2050' அறிக்கையில், கடல் மட்டம் உயரும் போது சென்னையில் மட்டும் 10 லட்சம் மக்கள் இடம்பெயரும் அபாயம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.