பா.ஜ.க.விற்கு எதிராக விமானத்தில் கோஷமிட்ட மாணவி சோபியாவின் தந்தை, பழைய பாஸ்போர்ட்டை ஒப்படைத்தது தொடர்பாக புதுக்கோட்டை காவல் நிலையத்தில் நேற்று இரவு நேரில் ஆஜரானார்.
பா.ஜ.க.விற்கு எதிராக விமானத்தில் கோஷமிட்ட மாணவி சோபியாவின் தந்தை, பழைய பாஸ்போர்ட்டை ஒப்படைத்தது தொடர்பாக புதுக்கோட்டை காவல் நிலையத்தில் நேற்று இரவு நேரில் ஆஜரானார். தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்பு பாஜகவுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதாக கடந்த 3-ம் தேதி மாணவி சோபியா கைது செய்யப்பட்டார். இவர் கனடா நாட்டில் உயர்கல்வி பயின்று வருகிறார். பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அப்போது, சோபியாவின் பழைய பாஸ்போர்ட் மற்றும் அமெரிக்க விசாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், மாணவி சோபியாவின் புதிய பாஸ்போர்ட்டை 7-ம் தேதி வழங்குமாறு, தூத்துக்குடி கந்தன்காலனியில் வசித்து வரும் அவரது தந்தை ஏ.ஏ. சாமிக்கு புதுக்கோட்டை போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி, மாணவி சோபியாவின் தந்தை ஏ.ஏ. சாமி தனது வழக்குரைஞர்கள் அதிசயகுமார், சந்தனகுமார் ஆகியோருடன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணி அளவில் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் காவல் ஆய்வாளர் திருமலை சிறிது நேரம் விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் வழக்குரைஞர் அதிசயகுமார் செய்தியாளர்களிடம் கூறியது: விசாரணையின்போது சோபியாவின் பழைய பாஸ்போர்ட் மற்றும் அமெரிக்க விசாவை காவல் துறையினர் திரும்ப ஒப்படைத்துவிட்டனர். புதிய பாஸ்போர்ட்டை அவர்கள் கேட்ட நிலையில், நோட்டரி பப்ளிக் வழக்குரைஞர் சான்றிட்டு பாஸ்போர்ட் நகலை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளோம். எங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாகவும் தெரிவித்துள்ளோம்.
மாணவி சோபியா 2 மாத விடுப்பில் தூத்துக்குடி திரும்பியுள்ளார். அவரது பாஸ்போர்ட்டை யாரும் இதுவரை முடக்கவில்லை. அசல் பாஸ்போர்ட் எங்களிடம் தான் உள்ளது என்றார். மேலும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது சோபியா தரப்பில் கொடுத்த புகார் மனு மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. அதுகுறித்து சில நாள்களில் விசாரணை அதிகாரியிடம் தெரிவிப்போம் என சோபியா வழக்கறிஞர் கூறியுள்ளார்.