
திருவள்ளூர்
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே விரைவில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஓடுகிறது ஆரணி ஆறு. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பிச்சாட்டூரில் உள்ள ஆரணியார் அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை ஆரணி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம்.
இப்படி திறந்து விடும் தண்ணீர் நாகலாபுரம், சுப்பாநாயுடுகண்டிகை, அச்சமநாயுடுகண்டிகை, சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
பிச்சாட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டால் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். ஊத்துக்கோட்டை– திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து அடியோடு இரத்து செய்யப்படும்.
இதனைக் கருத்தில் கொண்டு ஆங்கிலேயர்கள் 1937–ஆம் ஆண்டு ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் மீது தரைப் பாலத்தை அமைத்தனர். இதன் வழியாகத்தான் தற்போது ஊத்துக்கோட்டை – திருவள்ளூர் இடையே வாகனப் போக்குவரத்து நடந்து வருகிறது.
பிச்சாட்டூர் அணை திறக்கும் போதெல்லாம் ஆரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு வரும்போது ஊத்துக்கோட்டை தரைப்பாலம் மூழ்கி விடுவதால் வாகன போக்குவரத்து தடைப்பட்டு வருகிறது.
எனவே, ஆரணி ஆற்றின் மீது மேம்பாலம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக மண் தர பரிசோதனை மற்றும் இதர பணிகள் முடிவடைந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்திரவல்லி, நேற்று செய்தியாளர்களுக்கு இதுகுறித்து பேட்டி ஒன்று அளித்தார்.
அதில், "ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே விரைவில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் பேருந்து நிலையம் அருகே கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் மாசடைந்துள்ள குளத்தை மூடவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.