
திருவள்ளூர்
காதலியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய இளைஞரை, அங்கிருந்த தொழில் நுட்பக் கருவிகளை சேதப்படுத்தியதாகக் கூறி காவலாளர்கள் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கொப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மாரியின் மகன் கஜேந்திரன் (21). இவர் அப்பகுதியைச் சேர்ந்த பிளஸ-2 மாணவியை இரண்டு வருடங்களாக காதலித்து வந்தார். கடந்த வாரம் திருப்பதியில் திருமணமும் செய்து கொண்டாராம்.
இதனைத் தொடர்ந்து, திருமண வயதை அடையாத தங்களின் மகளை ஏமாற்றி கஜேந்திரன் திருமணம் செய்து கொண்டதாக அப்பெண்ணின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இதனடிப்படையில் காவலாளர்கள் இரண்டு குடும்பத்தினரையும் அழைத்துப் பேசி மாணவியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
இதனால், வேதனை அடைந்த கஜேந்திரன் குளக்கரை அருகே உள்ள பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். "காதலியை தன்னுடன் சேர்த்து வைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்" என்றும் மிரட்டல் விடுத்தார். பின்னர், மணவாள நகர் காவலாளர்கள் 6 மணி நேரம் போராடி கஜேந்திரனை பத்திரமாக மீட்டனர்.
இந்த நிலையில், கஜேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டபோது, செல்போன் கோபுரத்தில் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான தொழில் நுட்பக் கருவிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளார் என்று கிராம நிர்வாக அலுவலர் குமார் அளித்த புகாரின் பேரில், மணவாளநகர் காவலாளர்கள் வழக்குப் பதிந்து கஜேந்திரனை கைது செய்தனர்.
காதலியை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி போராடிய இளைஞருக்கு எப்படிப்பட்ட சோதனை வந்திருக்க்கு பார்த்தீர்களா!