எங்கள் மகன்களை யாரோ கட்டாய மதமாற்றம் செஞ்சிட்டாங்க – ஆட்சியரிடம் பெற்றொர் பரபரப்பு புகார்…

First Published Aug 9, 2017, 7:28 AM IST
Highlights
Someone compelled our sons to change their religion - the parents complaint


தங்களது மகன்களை யாரோ கட்டாயப்படுத்தி இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாற்றியதாக பெற்றோர் ஆட்சியரிடம் புகார் அளித்தனர். ஆனால், அவர்களது மகன்கள் தாங்கள் விருப்பப்பட்டே மதம் மாறினோம் என்றும் தங்களது பெற்றொர் சில இந்து அமைப்பின் தூண்டுதலால் தான் புகார் அளித்தனர் என்று தெரிவித்தனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள தோகைமலை பகுதியை சார்ந்தவர் மனோகரன், இவர் தோகைமலை பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதி நடத்தி வருகிறார். இந்து மதத்தைச் சேர்ந்த சிவனடியாரான இவர் ஆங்காங்கே ஆன்மீகத் திருப்பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இவரது மகன்கள் ராமமூர்த்தி (29), மீனாட்சி சுந்தரம் (26), இவர்கள் இருவரும் தந்தைக்கு உதவியாக அதே உணவு விடுதியில் உதவியாளராக இருந்து வருகின்றனர்.

மனோகரன் மற்றும் தோகைமலை வேதாசலபுரத்தைச் சேர்ந்த பூங்கொடி ஆகியோர் நேற்று முன்தினம் கரூர் ஆட்சியர் கோவிந்தராஜிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், “யாரோ சிலர் தங்கள் மகன்களை இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்துள்ளனர்” என்று தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜின் உத்தரவின் பேரில், குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் விமல்ராஜ் தலைமையில் தோகைமலை வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் அண்ணாதுரை, தோகைமலை காவல் ஆய்வாக்ளார் சுரேஷ்குமார் ஆகியோர் தோகைமலையில் பூங்கொடி மற்றும் மனோகரனிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் மனோகரனின் மகன்கள் இருவரும், பூங்கொடியின் மகனும் நேற்று மாலை கரூரில் செய்தியாளர்களுக்கு ஒன்றாகப் பேட்டியளித்தனர்.

அவர்கள், “தாங்கள் விருப்பப்பட்டே இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாகவும், எங்களை யாரும் கட்டாயப்படுத்தி மதம் மாற்றவில்லை” என்றும் திட்டவட்டமாகக் கூறினர்.

மேலும், “மதம் மாறிய விவகாரம் எங்களது பெற்றோருக்கு ஏற்கனவே தெரியும் என்றும், சில அமைப்பினர் தூண்டுதலால் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வைத்ததாகவும், மதம் மாறியதால் சிலர் எங்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர்” என்றும் தெரிவித்தனர். 

tags
click me!