
கன்னியாகுமரி
கடைவரம்பு பகுதிக்கு தண்ணீர் விட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மயிலாடி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், பாசனத்திற்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து கடந்த மாதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் முதல் கட்டமாக தோவாளை, அனந்தனாறு மற்றும் பழையாறு கால்வாய்களில் விடப்பட்டது. ஆனால், நாஞ்சில் நாடு புத்தனார் கால்வாய்களில் இன்னும் தண்ணீர் விடவில்லை. இதனால் கடைவரம்பு பகுதிகளான மயிலாடி, அழகப்பபுரம், அஞ்சுகிராமம் பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடைவரம்பு பகுதி விவசாயிகள் தங்கள் பகுதிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் அந்த கோரிக்கைக்கு செவி சாய்த்ததாக தெரியவில்லை.
நேற்று காலை மயிலாடியில் உள்ள பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு அலுவலகம் முன்பு திமுகவினர் திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு ஆஸ்டின் எம்.எல்.ஏ தலைமைத் தாங்கினார். அப்போது, அவர்கள் அஞ்சுகிராமம், அழகப்பபுரம் மற்றும் மயிலாடி பகுதி விவசாயிகள் நலன் காக்க கடைவரம்பு பகுதிவரை தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தினர்.
இப்போராட்டத்தில் மயிலாடி பேரூராட்சி முன்னாள் தலைவர் சாய்ராம், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் தாமரை பாரதி, மதியழகன் மற்றும் நிர்வாகிகள் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, ஜோசப் சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
பின்னர் அங்கு அஞ்சுகிராமம் காவல் உதவி ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில் காவலாளர்கள் குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்தியவர்களிடம், உதவி செயற்பொறியாளர் வசந்தி மற்றும் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, “கடைவரம்பு பகுதிக்கு தண்ணீர் விட உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
இதனையேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.