எங்களுக்குச் சொந்தமான மயானப் பகுதியை தனியார் ஆக்கிரமிக்க முயற்சிக்கிறார்கள் - முஸ்லீம்கள் புகார்…

First Published Jul 18, 2017, 7:29 AM IST
Highlights
some private are trying to occupy our Cemetery area - Muslims complain ...


ஈரோடு

அந்தியூரில் எங்களுக்குச் சொந்தமான மயானப் பகுதியை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்கிறார்கள் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஐம்பதுக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் ஆட்சியரிடத்தில் புகார் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

நம்பியூர் பேரூராட்சியில் உள்ள ராஜீவ்காந்தி நகர், சந்தனநகர், சத்தியா நகர், ஆண்டிக்காடு, காரக்காடு, ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்திருந்த மனு:

“நம்பியூர் பேரூராட்சியில் மேற்கண்ட குடியிருப்பு பகுதிகளில் 400 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் கோவில் மற்றும் பள்ளிக்கூடம் உள்ளது. தற்போது சந்தனநகர் பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடை அமைக்க கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் பெண்கள் மற்றும் மாணவ – மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

எனவே, சந்தனநகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் திட்டத்தை டாஸ்மாக் அதிகாரிகள் கைவிடவேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

சென்னிமலை பசுவப்பட்டி பகுதியைச் சேர்ந்த 40–க்கும் மேற்பட்ட பெண்கள் கொடுத்திருந்த மனு:

“எங்கள் பகுதியில் 750 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது வறட்சி காரணமாக ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வற்றிவிட்டது.

இதனால் கடந்த ஆறு மாதங்களாக எங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள 2 கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே எங்கள் பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யவேண்டும்” என்று கூறியிருந்தனர்.

அந்தியூர் பகுதியைச் சேர்ந்த 50–க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் கொடுத்திருந்த மனு:

“அந்தியூர், ஜெ.ஜெ.நகர், ஜீவா செட் காலனி, வெள்ளித்திருப்பூர் ஆகிய பகுதிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.

எங்களுக்குச் சொந்தமான மயானப் பகுதியை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்கிறார்கள். எனவே நாங்கள் தொடர்ந்து அந்த இடத்தை பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் மனு கொடுத்தனர். மொத்தம் 302 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி எஸ்.வி.குமார், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி என்.ராமச்சந்திரன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், மக்கள் பங்கேற்றனர்.

tags
click me!