
மதுரை மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்ற அரசு பேருந்தின் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்கினர். இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்ததோடு, டிரைவரும் படுகாயம் அடைந்தார்.
தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி, போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனால் நேற்று முன் தினம் முதல் போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 85 சதவீதம் பஸ்கள் இயங்காததால் போக்குவரத்து அடியோடு முடங்கியது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று சென்னை உயர்நீதிமன்றம் போக்குவரத்து ஊழியர்களை பணிக்கு திரும்புமாறும் இல்லையென்றால் பணிநீக்கம், இடைநீக்கம் செய்யப்படுவீர்கள் என எச்சரித்தது.
ஆனாலும் சட்டப்படி சந்தித்து கொள்வோம் என கூறி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே போக்குவரத்து பிரச்சனையை எதிர்கொள்ள தமிழக அரசு தற்காலிக ஓட்டுனர்களை வைத்து பேருந்துகளை இயக்கி வருகின்றன. இதற்கும் ஆங்காங்கே போக்குவரத்து ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்து, பெரியார் பேருந்துநிலையம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்துக் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.
இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பேருந்தின் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், பேருந்தின் கண்ணாடி குத்தியதில் ஓட்டுநர் குடியரசு கையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து தகவலறிந்து வந்த கிளை மேலாளர் சுந்தர் தலைமையில் அதிகாரிகள் காயமடைந்த ஓட்டுநர் குடியரசுவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.