
தேனி
தேனியில் தோட்டத்தில் இருந்து வீட்டுக்குள் நுழைந்த 3 அடி நீள நல்ல பாம்பு மிக்ஸிக்குள் புகுந்துவிட்டது. பின்னர், ஊரில் இருந்த பாம்பு பிடி வீரரை அழைத்து அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாம்பை பிடித்தனர்.
தேனி மாவட்டம், தேனி மாவட்டம், போடி அருகே கிருஷ்ணா நகரில் வசிப்பவர் மணிவேல். இந்தப் பகுதியில் மண்டிக்கிடக்கும் புதரில் இருந்து வெளியேறிய பாம்பு ஒன்று அவரது வீட்டுக்குள் புகுந்தது.
இதனையடுத்து பாம்பு பிடிக்கும் வீரரான தேனி பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த பாம்பு கண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த அவர் அரை மணி நேர போராட்டத்திற்கு பின், மிக்ஸிக்குள் புகுந்திருந்த 3 அடி நீள நல்ல பாம்பை பிடித்தார். பின்னர் அவர் அந்த பாம்பை போடி அணைப் பிள்ளையார் கோயில் அருகிலுள்ள வனப்பகுதியில் கொண்டுசென்று விட்டார்.
அதேபோன்று, பெரியகுளம் ஏ.வாடிப்பட்டி அருகே உள்ளது ஏ.புதூர் வயல். இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி தண்ணீர் பாய்ச்சச் சென்றபோது வயலில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், இதுகுறித்து வனத்துறையினருக்கு அவர் தகவல் கொடுத்தார். அந்த தகவலைத் தொடர்ந்து நிகழ்விடத்திற்கு வந்த சோத்துப்பாறை வனச்சரக அலுவலர் சுந்தரேசன் மற்றும் வனவர் ஆகியோர் கொண்ட குழுவினர் அந்த மலைப்பாம்பை பத்திரமாக பிடித்து சோத்துப்பாறை வனப்பகுதியில் விட்டனர்.