சிலரது இடையூறல்களால் எங்களால் நாகரிக வாழ்க்கைக்கு வரமுடியவில்லை - நரிக்குறவர்கள்

First Published Dec 17, 2016, 10:40 AM IST
Highlights


உசிலம்பட்டி,

குடிநீர் வழங்க விடாமல் சிலரது இடையூறல்களால் நாகரிக வாழ்க்கைக்கு வரமுடியாமல் பின்னோக்கிச் செல்கிறோம் என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

உசிலம்பட்டி அருகே எருமார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது திருநகர் நரிக்குறவர் காலனி. இந்த காலனி பொதுமக்கள் குடிதண்ணீருக்காக ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆகியோருக்கு பல முறை மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு எருமார்பட்டி ஊராட்சிக்கு செல்லும் கூட்டு குடிநீர் குழாயில் இணைப்பு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் பரசிவம், இளங்கோவன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தெய்வராமன், ஊராட்சி செயலர் தனம், ஆகியோர் முன்னிலையில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு நரிக்குறவர் காலனிக்கு குடிநீர் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கூட்டு குடிநீர் திட்ட முன்னாள் ஒப்பந்தகாரர், இந்த குழாய் இணைப்பை துண்டித்துவிட்டார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “தன்னிடம் அனுமதி பெறாததால், இந்த குழாய் இணைப்புக்கு அனுமதி தரமுடியாது” என்று கூறியதாக, திருநகர் நரிக்குறவர் காலனி பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி ஊராட்சி செயலர் தனத்திடம் கேட்டபோது, அவர், “கூட்டு குடிநீருக்காக ஊராட்சியிலிருந்து பணம் கட்டிக் கொண்டு இருக்கிறோம். பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கவேண்டியது ஊராட்சியின் கடமை. எங்கள் ஊராட்சிக்கு வரக்கூடிய கூட்டுக்குடிநீரிலிருந்து, திருநகர் நரிக்குறவர் காலனிக்கு தண்ணீர் வழங்குகிறோம்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து திருநகர் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த ராஜம்பிள்ளை, “நாங்கள் வாழ இடம் இல்லாமல், அரசு வழங்கிய காலியிடத்தில் வாழ்கிறோம். குடிநீருக்காக அலைக்கழிக்கப்பட்டு, மிரட்டப்படுகிறோம். அதிகாரிகள் முன்வந்து எங்களுக்கு உதவி செய்தாலும், ஒப்பந்தகாரர்கள் எங்களை வாழவிடாமல், மிரட்டி விரட்ட நினைக்கின்றனர்” என்று கூறினார்.

மேலும், அந்த பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், நிலா ஆகியோர் கூறியதாவது:

“நீண்ட கோரிக்கைக்குப் பின்பு குடிநீர் வழங்கப்பட்டது. அதை துண்டித்தது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. பிள்ளைகளுக்கு சமைத்து அவர்களை பள்ளிக்கு அனுப்ப குடிநீர் இல்லாமல் சிரமப்படுகிறோம்.

எங்கள் வாரிசுகளாவது நாகரிக வாழ்க்கைக்கு வரவேண்டும் என்று தான் ஊசி மணி பாசி விற்று வாழ்ந்து வருகிறோம். ஆனால், இதுபோன்றவர்களால் தொடர்ந்து துன்பப்பட்டு, நாங்கள் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு எங்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்து தரவேண்டும். இல்லையென்றால் நாங்கள் அனைவரும் எங்களது குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை அனைத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க உள்ளோம்” என்றனர்.

click me!