சவுக்கு சங்கர் கையை உடைத்து சித்தரவதை.. நீதி விசாரணை நடத்திடுக- சமூக ஆர்வலர்களால் திடீரென வெளியான கூட்டறிக்கை

By Ajmal Khan  |  First Published May 17, 2024, 2:27 PM IST

ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் மீது கஞ்சா பொய் வழக்கு, சிறையில் கையை உடைத்து சித்தரவதை, குண்டர் சட்டம் ஏவியது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 


சவுக்கு சங்கர் மீது பொய் வழக்கு

யுடியூப்பர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பிரபல ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் மீது காவல்துறையில் உள்ள பெண்களை இழிவுப்படுத்தி யூடியூப் சேனலுக்குப் பேட்டி கொடுத்ததாக கோவை போலீசார் வழக்குப் போட்டு அவரை கடந்த 04.05.2024 அன்று தேனியில் கைது செய்தனர். பின்னர், அவர் தனது வாகனத்தில் 500 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்குப் போட்டுள்ளனர். தற்போது போலீசார் அவர் மீது கோவை, தேனி, திருச்சி, சேலம், சென்னை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 7 வழக்குகள் போட்டுள்ளனர். இன்னும் பல வழக்குகள் போட்டு வருகின்றனர்

Latest Videos

undefined

அப்பட்டமான மனித உரிமை மீறல்

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர் மீது 10க்கும் மேற்பட்ட சிறைக் காவலர்கள் இருட்டு அறையில் அடைத்து தாக்கிச் சித்தரவதைச் செய்துள்ளனர் இதனால் அவரது வலது கை உடைந்ததோடு, உடலெங்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து சவுக்கு சங்கர் நீதித்துறை நடுவரிடம் புகார் கூறியதைத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த அப்பட்டமான மனித உரிமை மீறலுக்குக் கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார்தான் முழுக் காரணம், இதுகுறித்து நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது கோவை சிறையில் தனது உயிருக்கு ஆபத்து என்றும், சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தன்னைத் தாக்கிக் கையை உடைத்தார் எனவும் சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.

பழிவாங்கும் நடவடிக்கை

சவுக்கு சங்கர் காவல்துறையில் உள்ள பெண்களை இழிவுப்படுத்தி யூடியூப் சேனலுக்குப் பேட்டி கொடுத்த வழக்கை நடத்தி அவருக்குச் சட்டப்படி தண்டனைப் பெற்றுத் தருவதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவரை கோவை மத்திய சிறையில் தாக்கி, அவரது வலது கையை உடைத்திருப்பது என்பது தண்டனைக்குரிய குற்றமாகும் மேலும், அவரைப்பழிவாங்கும் நோக்கோடு கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்குப் போட்டது ஏற்றுக் கொள்ள முடியாதது. அதோடு விடாமல் பல்வேறு மாவட்டங்களில் புகார் அளித்து வழக்குகள் போடுவது தமிழக அரசு மற்றும் காவல்துறையின் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும்.

குண்டர் சட்டம் நீக்கிடுக

சவுக்கு சங்கர் கைதை தொடர்ந்து ரெட்பிக்ஸ்' யூடியூப் சேனல் செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்ட் டில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார் அவர் மீதும் பல்வேறு வழக்குகள் போட்டுக் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சவுக்கு சங்கர் மீதான காவல்துறையின் பழிவாங்கல் நடவடிக்கையின் உச்சகட்டமாக தற்போது அவர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டுள்ளது. குண்டர் சட்டம் உள்ளிட்ட தடுப்புக்காவல் சட்டங்கள் மனித உரிமைகளுக்கு எதிரானவை என்பதால் அவற்றைச் சட்டப் புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டுமென மனித உரிமை அமைப்புகள் நீண்ட காலமாக போராடி வருகின்றன. இச்சூழலில் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல. 

நீதி விசாரணை நடத்தனும்

தமிழக அரசையும், காவல்துறையையும் தொடர்ந்து விமர்சிக்கும் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் போன்ற ஊடகவியலாளர்களை மீது பழிவாங்கும் நோக்கில், ஊடகச் சுதந்திரத்திற்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். சவுக்கு சங்கர் மீது தாக்குதல் நடத்தி அவரது வலது கையை உடைத்த கோவை மத்திய சிறைக் காவலர்கள், சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மீது உரிய குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஊடகவியலாளர்கள் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் கைது, அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். 

OOTY: ஊட்டிக்கு சுற்றுலாவிற்கு போறீங்களா! நாளை முதல் 3 நாட்கள் மட்டும் வந்துராதீங்க-ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

click me!